ஆஷஸ்: ஆஸி., 5-0 என வெல்லும்... மெக்ராத் கணிப்பு
லண்டன்: ''ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றும்,'' என, மெக்ராத் கணித்துள்ளார்.ஆஸ்திரேலிய மண்ணில், இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட், வரும் நவ. 21ல் பெர்த்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்பேன் (டிச. 4-8), அடிலெய்டு (டிச. 17-21), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2026, ஜன. 4-8) நடக்கவுள்ளன.இத்தொடரில் கோப்பை வெல்லும் அணி குறித்து, முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் கூறியது: சமீபத்தில் முடிந்த 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' தொடரின் அடிப்படையில் இங்கிலாந்து அணி ஆஷஸ் கோப்பை வெல்வது கடினம். ஆஸ்திரேலிய அணி 5-0 என தொடரை முழுமையாக கைப்பற்றும். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட், லியான் என திறமையான பவுலர்கள் இருப்பது பலம்.இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக் விக்கெட்டை கைப்பற்றுவது ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சவாலானதாக இருக்கும். தற்போது நல்ல 'பார்மில்' உள்ள ரூட், ஆஸ்திரேலிய மண்ணில் பேட்டிங்கில் சாதிக்கலாம். விளையாட்டு நட்சத்திரங்கள் பயமின்றி விளையாடுவது மிகவும் பிடிக்கும். இதைத்தான் இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலமும் விரும்புகிறார்.இவ்வாறு மெக்ராத் கூறினார்.2015க்கு பின்...இங்கிலாந்து அணி, கடைசியாக 2015ல் ஆஷஸ் கோப்பை வென்றது. அதன்பின் நடந்த 4 தொடரில், ஆஸ்திரேலியா 2 முறை (2017-18, 2021-22) தொடரை கைப்பற்றியது. இரண்டு முறை (2019, 2023) தொடர் சமன் ஆனது. 'நடப்பு சாம்பியன்' அடிப்படையில் ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.* ஆஸ்திரேலிய மண்ணில், இங்கிலாந்து அணி கடைசியாக 2010-11ல் ஆஷஸ் கோப்பை வென்றது. அதன்பின் இங்கு நடந்த 3 தொடரிலும் (2013-14, 2017-18, 2021-22) ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது.