மேலும் செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது
09-Dec-2024
பசெட்டெர்ரெ: வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, கோப்பை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. மூன்றாவது போட்டி நேற்று செயின்ட் கிட்சில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.வங்கதேச அணிக்கு தன்ஜித் (0), லிட்டன் தாஸ் (0) ஏமாற்றினர். சவுமியா சர்கார் (73), கேப்டன் மெஹிதி ஹசன் (77) அரைசதம் விளாசினர். வங்கதேச அணி 50 ஓவரில் 321/5 ரன் குவித்தது. மகமதுல்லா (84), ஜேக்கர் அலி (62) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட் சாய்த்தார்.கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கீசி கார்டி 95 ரன் எடுத்து கைகொடுத்தார். அறிமுக வீரர் ஆமிர் ஜாங்கோ சதம் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை எளிதாக எட்டியது. 45.5 ஓவரில் 325/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஆமிர் (104), குடகேஷ் (44) அவுட்டாகாமல் இருந்தனர். 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. 46 ஆண்டுக்குப் பின்...கடந்த 1978ல் அறிமுக வீரராக களமிறங்கிய ஹெய்ன்ஸ் (148, எதிரணி-ஆஸ்திரேலியா) சதம் விளாசினார். தற்போது 46 ஆண்டுக்குப் பின் அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் ஆமிர் ஜாங்கோ (104).
09-Dec-2024