புச்சி பாபு: அரையிறுதியில் தமிழகம்
சேலம்: புச்சி பாபு கிரிக்கெட் அரையிறுக்கு டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணி முன்னேறியது. லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது.தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சேலத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் குஜராத் 371, டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் 211 ரன் எடுத்தன. குஜராத் அணி 2வது இன்னிங்சில் 58 ரன்னுக்கு சுருண்டது. டி.என்.சி.ஏ., அணி கேப்டன் சித்தார்த் 8 விக்கெட் சாய்த்தார்.பின் 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணிக்கு ஆன்ட்ரி சித்தார்த் (115*) கைகொடுக்க, 220/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆன்ட்ரி சித்தார்த் (55*, 115* ரன்) வென்றார். 'சுழலில்' அசத்திய கேப்டன் சித்தார்த் 14 விக்கெட் (6+8) சாய்த்தார்.மும்பை திணறல்: கோவையில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியில் டி.என்.சி.ஏ., லெவன் அணி முதல் இன்னிங்சில் 379 ரன் குவித்தது. பின் சாய் கிஷோர் (5 விக்.,) 'சுழலில்' சிக்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 156 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அதிஷ் (57), லோகேஷ்வர் (73), மோகித் ஹரிகரன் (52) கைகொடுக்க டி.என்.சி.ஏ., லெவன் அணி 2வது இன்னிங்சில் 286 ரன் எடுத்தது. பின், 510 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, ஆட்டநேர முடிவில் 6/0 ரன் எடுத்திருந்தது.ஐதராபாத் வெற்றி: திருநெல்வேலியில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 207, ஐதராபாத் 560/6 ('டிக்ளேர்') ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சில் ஏமாற்றிய ம.பி., அணி 124 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ், 229 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.சத்தீஸ்கர் அபாரம்: திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் பரோடா அணி முதல் இன்னிங்சில் 327 ரன் எடுத்தது. அனுஜ் திவாரி (114), ககன்தீப் சிங் (77*) கைகொடுக்க சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 427 ரன் குவித்தது. ஆட்டநேர முடிவில் பரோடா அணி 2வது இன்னிங்சில் 9/0 ரன் எடுத்திருந்தது.