உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / புயலா பும்ரா...ஸ்டைலா இந்தியா: 5 விக்கெட் வீழ்த்தினார்

புயலா பும்ரா...ஸ்டைலா இந்தியா: 5 விக்கெட் வீழ்த்தினார்

கோல்கட்டா: கோல்கட்டா டெஸ்டின் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 'புயல்' வேகத்தில் பந்துவீசிய பும்ரா, 5 விக்கெட் வீழ்த்தினார்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணியில் ரபாடா (விலா எலும்பு பகுதி காயம்) நீக்கப்பட்டு, கார்பின் பாஷ் இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற கேப்டன் பவுமா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். நல்ல துவக்கம்: தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம், ரிக்கிள்டன் நல்ல அடித்தளம் அமைத்தனர். சிராஜ் ஓவரில் ரிக்கிள்டன் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் அடக்கி வாசித்த மார்க்ரம், 23வது பந்தில் தான் சிராஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ரன் கணக்கை துவக்கினார். அக்சர் படேல் பந்துவீச்சை பதம் பார்த்த மார்க்ரம் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 10 ஓவரில் 57/0 என தென் ஆப்ரிக்கா வலுவாக இருந்தது. பும்ரா மிரட்டல்: இந்த சமயத்தில் பும்ரா திருப்புமுனை ஏற்படுத்தினார். மணிக்கு 140.7 கி.மீ., 'வேகத்தில்' இவர் வீசிய பந்தில் ரிக்கிள்டன் (23) போல்டானார். இவரது அடுத்த ஓவரில் மார்க்ரம் (31) அவுட்டானார். பின் இந்திய பவுலர்கள் அசத்த, விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. குல்தீப் 'சுழலில் கேப்டன் பவுமா (3), முல்டர் (24) சிக்கினர். மீண்டும் பந்துவீச வந்த பும்ரா இம்முறை ஜோர்ஜியை (24) வெளியேற்றினார். சிராஜ் 'வேகத்தில்' கைல் (16), யான்சென் (0) நடையை கட்டினர். மஹாராஜை (0) அவுட்டாக்கிய பும்ரா, டெஸ்டில் 16வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் ஏமாற்றம்: அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி. யான்சென் 'வேகத்தில்' ஜெய்ஸ்வால் (12) போல்டானார். 3வது வீரராக வந்த வாஷிங்டன் சுந்தர் (6*), கே.எல்.ராகுல் (13*) சேர்ந்து பொறுப்பாக ஆடினார். போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 37/1 ரன் எடுத்து, 122 ரன் பின்தங்கியிருந்தது. இன்று கேப்டன் சுப்மன் கில், ரிஷாப் உள்ளிட்ட பேட்டர்கள் கைகொடுத்தால், வலுவான ஸ்கோரை எட்டலாம். 57/0-159/10தென் ஆப்ரிக்க அணி நேற்று 10 ஓவரில் 57/0 ரன் எடுத்திருந்தது. அடுத்த 45 ஓவரில் 102 ரன்னுக்கு 10 விக்கெட்டையும் பறிகொடுத்தது. முதல் இன்னிங்சில் 4 மணி நேரம் 13 நிமிடம் மட்டும் தாக்குப்பிடித்தது. * முதல் நாளில் 75 ஓவரில் 11 விக்கெட் சரிந்தன. இதற்கு முன் ஈடன் கார்டனில் 2019ல் நடந்த 'பிங்க் பால்' டெஸ்டின் (இந்திய-வங்கம், 2019) முதல் நாளில் அதிபட்சமாக 13 விக்கெட் வீழ்ந்தன.5வது இடம்டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் 5வது இடத்தை பகவத் சந்திரசேகருடன் (58 போட்டி) பும்ரா (51 போட்டி) பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 16 முறை 5 விக்கெட் சாய்த்தனர். முதல் நான்கு இடங்களில் அஷ்வின் (37 முறை, 106 போட்டி), கும்ளே (35, 132), ஹர்பஜன் (25, 103), கபில்தேவ் (23, 131) உள்ளனர்.* ஈடன் கார்டனில் முதல் நாளில் 5 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வேகப்பந்துவீச்சாளரானார் பும்ரா. இதற்கு முன் 2019ல் இஷாந்த் சர்மா (2019, எதிர், வங்கம்) 5 விக்கெட் கைப்பற்றியிருந்தர். நான்கு 'ஸ்பின்னர்'இந்திய அணி நீண்ட இடைவெளிக்கு பின் நான்கு ஸ்பின்னர்களுடன் (அக்சர் படேல், குல்தீப், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்) களமிறங்கியது. கடைசியாக நாக்பூர் டெஸ்டில் (எதிர், இங்கி., 2012) பிரக்யான் ஓஜா, ரவிந்திர ஜடேஜா, பியுஷ் சாவ்லா, அஷ்வின் இடம் பெற்றிருந்தனர். நேற்று வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் தான் கொடுத்தனர். சுழலுக்கு பதில் 'வேகப்புயல்' பும்ரா தான் 'மேஜிக்' நிகழ்த்தினார்.* இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக 6 இடது கை பேட்டர்கள் (ஜெய்ஸ்வால், வாஷிங்டன், ரிஷாப், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ்) இடம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி