வங்கத்தை குறைத்து மதிப்பிடலாமா: ரிஷாப் பன்ட் எச்சரிக்கை
பெங்களூரு: ''டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது,'' என, இந்தியாவின் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.இந்தியா வரவுள்ள வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட், மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செப். 19ல் சென்னையில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் (செப். 27 - அக். 1) நடக்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இதுகுறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் கூறியது: ஆசிய அணிகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தங்களது மண்ணில் நன்றாக விளையாடக் கூடியவை. ஏனெனில் இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை நன்கு பழக்கப்பட்டிருக்கும். இந்திய அணி, அதன் திறமையை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.எதிரணி யாராக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். சர்வதேச போட்டிகளில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். தற்போதுள்ள நிலையில் அனைத்து அணிகளும் நன்றாக விளையாடுகின்றன. எனவே எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.சர்வதேச வீரர்கள், உள்ளூர் போட்டியில் விளையாடுவது அவசியம். இது, சிறந்த பயிற்சியாக அமையும். தவிர சீனியர் வீரர்களிடம் இருந்து, இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். துலீப் டிராபியில் விளையாடுவதன் மூலம் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப இருப்பது மகிழ்ச்சி.இவ்வாறு அவர் கூறினார்.