புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இருந்து, தென் ஆப்ரிக்காவுக்கு இடம் மாற்றப்பட வாய்ப்புள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும். கடைசியாக 2017 பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றது.தற்போது 8 ஆண்டுக்குப் பின், 2025, பிப். 19-மார்ச் 9ல் பாகிஸ்தானில் இத்தொடர் நடக்க உள்ளது. ஆனால் மும்பை (2008) பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்திய அணி, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதில்லை. 2012-13ல் 'டி-20', ஒருநாள் தொடர், 2023ல் ஒருநாள் உலக கோப்பை தொடருக்காக, பாகிஸ்தான் இந்தியா வந்தது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தனது நிலையில் உறுதியாக உள்ளது. பி.சி.சி.ஐ., முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.பி.,), ஐ.சி.சி., தெரிவித்தது. தவிர, 'இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள், பைனலை, துபாய்க்கு மாற்ற வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க பி.சி.பி., மறுத்தது. தவிர இந்திய அணி வரவில்லை என்றாலும், தொடரை நடத்த பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.ஐ.சி.சி., முடிவுஒருவேளை இந்தியா கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை எனில், ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்ற, ஐ.சி.சி., திட்டமிட்டுள்ளதாம். அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான், இத்தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. புறக்கணிப்புபாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில்,' வேறு நாட்டுக்கு தொடர் மாற்றப்பட்டால், பங்கேற்க வேண்டாம். தவிர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை ஐ.சி.சி., அல்லது ஆசிய கோப்பை என எந்த தொடரிலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட வேண்டாம் என, அரசு கூறியுள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிபார்வையற்றோருக்கான உலக கோப்பை 'டி-20' தொடர், பாகிஸ்தானில் நவ. 22-டிச. 3ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்து உள்துறை, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியை செல்லாத நிலையில், பார்வையற்ற அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி தந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.