உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சென்னை-பெங்களூரு மோதல்: ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு

சென்னை-பெங்களூரு மோதல்: ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியானது. மார்ச் 22ல் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.ஐ.பி.எல்., தொடரின் 17வது சீசனுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 74 போட்டிகள், 10 நகரங்களில் நடக்க உள்ளன. பைனல் மே 26ல் நடக்கவுள்ளது.விரைவில் 18வது லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால் முதற்கட்டமாக 21 போட்டிகளுக்கான அட்டவணை (மார்ச் 22 முதல் ஏப். 7) வெளியானது. மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியான பின் அறிவிக்கப்படும். மார்ச் 22ல் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' தோனி தலைமையிலான சென்னை அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது.

போட்டி நேரம்

ஐ.பி.எல்., போட்டிகள் இரவு 7:30 மணிக்கு துவங்கும். முதல் போட்டி மட்டும் இரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகும். இரண்டு போட்டிகள் இருக்கும் நாட்களில் மதியம் 3:30, இரவு 7:30 மணிக்கு துவங்கும்.

பைனலுக்கு எப்படி

மொத்தம் 10 அணிகள் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டியில் பங்கேற்கும். இதில் ஒரு அணி, தங்கள் பிரிவில் உள்ள மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் (4 போட்டி), எதிர் பிரிவில் உள்ள 5 அணிகளுடன் தலா 2 முறையும் (10 போட்டி) விளையாடும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.* புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 'தகுதிச் சுற்று-1'ல் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.* மூன்று, 4வது இடம் பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' போட்டியில் விளையாடும். இதில் வெல்லும் அணி தகுதிச் சுற்று-2க்கு முன்னேறும். தோல்வியடையும் அணி வெளியேறிவிடும்.* தகுதிச் சுற்று-1ல் தோற்ற அணியும், 'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற அணியும் தகுதிச் சுற்று-2ல் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்குள் நுழையும்.* தகுதிச் சுற்று-1, 2ல் வென்ற அணிகள் பைனலில் மோதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி