சென்னனை-பெங்களூரு அணிகள் மோதல்: தோனி-கோலி ரசிகர்கள் உணர்ச்சிவசம்
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்த சென்னை அணி, ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.பிரிமியர் தொடரில் இம்முறை சென்னை அணிக்கு எதுவுமே எடுபடவில்லை. சேப்பாக்கம் கோட்டை தகர்ந்தது. இங்கு பங்கேற்ற 6 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்தது. கடந்த காலங்களை போல, 'ஸ்பின்னர்'களுக்கு ஏற்ற வகையில் சேப்பாக்கம் ஆடுகளம் அமைக்கப்படாதது ஏமாற்றம்.தடுமாறும் பேட்டிங்: சென்னை அணி சார்பில் அதிக ரன் எடுத்திருப்பவர் ஷிவம் துபே (10 போட்டி, 248 ரன்). இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இவரது பெயர் 'டாப்-20' இடத்தில் கூட இல்லை. இது, அணியின் பேட்டிங் பலவீனத்தை காட்டுகிறது. ரச்சின், கான்வே நீக்கப்பட்ட நிலையில், ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே அதிரடி துவக்கம் தர வேண்டும். 'மிடில் ஆர்டரில்' பிரவிஸ், துபே, ஜடேஜா அசத்தினால் நல்லது. 'பினிஷிங்' பணிக்கு 'தல' தோனி உள்ளார். முன்பு போல இவரால் விளாச முடியவில்லை. இதனால், 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் கைகொடுத்தால், இம்முறை சேப்பாக்கத்தில் பெங்களூருவிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி தரலாம். வேகப்பந்துவீச்சில் பதிரனா பரிதவிக்கிறார். கலீல் அகமது நம்பிக்கை தருகிறார். 'சுழலில்' நுார் அகமது, ஜடேஜா, அஷ்வின் சாதிக்கலாம். 'ரன் மெஷின்' கோலி: பெங்களூருவை பொறுத்தவரை கோலி அருமையான 'பார்மில்' இருப்பது பலம். கடந்த 5 இன்னிங்சில் 4 அரைசதம் அடித்துள்ளார். 10 போட்டிகளில் 443 ரன் (சராசரி 63.28) குவித்துள்ளார். இவருக்கு தேவ்தத் படிக்கல் (9 போட்டி, 230 ரன்), குர்ணால் பாண்ட்யா 'கம்பெனி' கொடுக்கின்றனர். காய்ச்சலால் பில் சால்ட் அவதிப்படுவது, 'மிடில் ஆர்டரில்' கேப்டன் ரஜத் படிதர் தடுமாறுவது பலவீனம். கடைசி கட்ட அதிரடிக்கு டிம் டேவிட். ஜிதேஷ் சர்மா உள்ளதால், வெற்றியை வசப்படுத்தி 'பிளே-ஆப்' செல்ல முயற்சிக்கும். 'வேகத்தில்' மிரட்ட ஹேசல்வுட், புவனேஷ்வர் உள்ளனர். 'டெத் ஓவரில்' பட்டையை கிளப்பும் ஹேசல்வுட், 10 போட்டியில் 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 'சுழலில்' அசத்த குர்ணால், சுயாஷ் சர்மா உள்ளனர்.மழை வருமாநேற்று அடிக்கடி மழை குறுக்கிட்டதால், பெங்களுரு அணி வீரர்கள் வலை பயிற்சியை ரத்து செய்தனர். இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு. ஓவர்கள் குறைக்கப்படலாம். சின்னசாமி மைதானத்தில், தண்ணீரை விரைவாக வெளியேற்றும் வசதி இருப்பது நல்ல விஷயம். * பெங்களூரு சின்னசாமி மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. பவுண்டரி துாரம் குறைவு என்பதால், பெரிய ஸ்கோர் எட்டலாம். யார் ஆதிக்கம்இரு அணிகளும் பிரிமியர் அரங்கில் 35 முறை மோதின. சென்னை 22, பெங்களூரு 12ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை* பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதிய 11 போட்டியில், இரு அணிகளும் தலா 5 வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
இது கடைசியா...
இந்திய அணிக்காக தோனி, கோலி சேர்ந்து பல வெற்றிகள் தேடித் தந்துள்ளனர். சிறந்த நண்பர்களான இவர்கள், பாசப்பறவைகளாக வலம் வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ல் தோனி ஓய்வு பெற்றார். அப்போது 'தோனி தான் எனக்கு எப்போதும் கேப்டன்' என சொன்னார் கோலி. தற்போது 43 வயதான தோனி, உடல்நிலையை பொறுத்து, அடுத்த ஆண்டு பிரிமியர் தொடரில் விளையாடுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஒருவேளை இத்தொடருடன் ஓய்வு பெற்றால், பிரிமியர் அரங்கில் தோனி-கோலி விளையாடுவது இன்று கடைசி போட்டியாக இருக்கலாம். இதனால், ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளனர்.