அமெரிக்க கிரிக்கெட் சஸ்பெண்ட் * ஐ.சி.சி., நடவடிக்கை
துபாய்: விதிகளை மீறிய அமெரிக்க கிரிக்கெட் உறுப்பினர் அந்தஸ்தை, ஐ.சி.சி., சஸ்பெண்ட் செய்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,) கடந்த 1965 முதல், உறுப்பு அணி அந்தஸ்துடன் உள்ளது அமெரிக்கா. கடந்த 2024ல் அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது. தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் பங்கேற்ற அமெரிக்கா, லீக் சுற்றில் பாகிஸ்தானை சாய்த்தது. 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியதால், 2026 'டி-20' உலக தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது.திடீர் முடிவுதற்போது, அமெரிக்காவின் உறுப்பு அணி அந்தஸ்தை ஐ.சி.சி., நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை:ஐ.சி.சி., விதிகளை தொடர்ந்து அமெரிக்கா மீறி வருகிறது. நிலையான நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை. அமெரிக்க ஒலிம்பிக், பாராலிம்பிக் கமிட்டியிடம் இருந்து, அமெரிக்க கிரிக்கெட் போர்டு அந்தஸ்து பெற போதிய முயற்சி எடுக்கவில்லை. அமெரிக்கா, உலகளவில் கிரிக்கெட் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டது. இதனால் கிரிக்கெட்டின் நலன்களை பாதுகாக்கும் வகையில் அமெரிக்க உறுப்பு அணி அந்தஸ்து 'சஸ்பெண்ட்' செய்யப்படுகிறது. இருப்பினும் ஐ.சி.சி., தொடர்களில் அமெரிக்க அணி பங்கேற்பது, லாஸ் ஏஞ்சல்ஸ் (2028) ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவது போன்றவை இதனால் பாதிக்கப்படாது. இதற்காக ஐ.சி.சி., தற்காலிக குழு அமைக்கப்படும். இதன் சார்பில் தற்காலிக தடையை நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.