உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சூப்பர் கேப்டன் சூர்யகுமார் * மயங்க், நிதிஷ் பாராட்டு

சூப்பர் கேப்டன் சூர்யகுமார் * மயங்க், நிதிஷ் பாராட்டு

குவாலியர்: ''இளம் வீரர்கள் விரும்பும் கேப்டனாக திகழ்கிறார் சூர்யகுமார். முழு சுதந்திரம் அளிக்கிறார்,'' என மயங்க் யாதவ், நிதிஷ் குமார் பாராட்டினர்.இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. ம.பி.,யின் குவாலியரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இதில் அறிமுகமான டில்லி 'வேகப்புயல்' மயங்க் யாதவ் 22, ஆந்திர 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் 21, அசத்தினர். முதல் ஓவரையே 'மெய்டனாக' வீசினார் மயங்க். 14 'டாட் பால்' உடன் ஒரு விக்கெட் வீழ்த்தினார். நிதிஷ் குமார், 16* ரன் எடுத்தார்.மயங்க் கூறுகையில்,''வயிற்று பிடிப்பு காரணமாக 3-4 மாதம் போட்டிகளில் பங்கேற்கவில்லை. திடீரென சர்வதேச போட்டியில் அறிமுகமானதால், பதட்டமாக இருந்தது. கேப்டன் சூர்யகுமார் தான் ஊக்கம் அளித்தார். பந்துவீச தயாரான போது,'உங்கள் எண்ணப்படி பந்துவீசுங்கள். இது அறிமுக வேகப்பந்துவீச்சாளருக்கு முக்கியம்,'என்றார். வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பது இவரது சிறப்பு. எனது வளர்ச்சியில் பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கலுக்கு முக்கிய பங்கு உண்டு. மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் பந்துவீசுவது என் பலம். ஆனாலும் சர்வதேச அளவில், துல்லியமாக பந்துவீசுவதே அதிக பலன் தரும். இந்திய அணிக்காக விளையாடியதன் மூலம், எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது,''என்றார்.நிதிஷ் குமார் கூறுகையில்,''களத்தில் சூர்யகுமார் 'கூலாக' இருப்பார். கேப்டன் பதவியில் அசத்துகிறார். அறிமுக வீரர்களுக்கு பதட்டம் இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். எண்ணப்படி செயல்பட சொன்னார். இதை தான் இளம் வீரர்கள் கேப்டன்களிடம் இருந்து எதிர்பார்ப்பர். எங்களுக்கு நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்,''என்றார். வருண் உருக்கம்'சுழலில்' மிரட்டிய வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார். இவர் கூறுகையில்,''ஒவ்வொரு முறையும் இந்திய அணி அறிவிக்கப்படும் போது, 'என் பெயர் ஏன் இல்லை' என்ற ஏக்கம் ஏற்படும். மனம் தளராமல் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று 'கம்பேக்' கொடுத்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றேன். மறுபிறவி எடுத்தது போல உணர்ந்தேன். எனது பந்துவீச்சில் சிறிய மாற்றம் செய்தேன். முன்பு 'சைடு-ஸ்பின்' முறையில் பந்துவீசினேன். இப்போது 'ஓவர்-ஸ்பின்' முறையில் பந்துவீசுகிறேன். இந்த சிறிய மாற்றம் நல்ல பலனை தந்தது,''என்றார். எங்களுக்கு தெரியாது...வங்கதேச அணியின் பலவீனம் 'பேட்டிங்' தான். குவாலியர் போட்டியில் 127 ரன்னுக்கு (19.5 ஓவர்) சுருண்டது. பின் களமிறங்கிய இந்தியா 11.5 ஓவரில் (132/3) இலக்கை எட்டி, மின்னல் வேக வெற்றி பெற்றது. இது பற்றி வங்கதேச கேப்டன் ஷான்டோ கூறுகையில்,''உள்ளூரில் 140-150 ரன் எடுப்போம். எங்களது பேட்டர்களுக்கு 180 ரன்னை எப்படி எடுக்க வேண்டுமென தெரியாது. 'பவர்-பிளே' ஓவரில் அதிக ரன் சேர்க்க முயற்சிக்க வேண்டும். எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை