புனே: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் புனேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259, இந்தியா 156 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி, 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.கடின இலக்கை விரட்டிய இந்திய அணி மீண்டும் சான்ட்னர் 'சுழலில்' சிக்கியது. கேப்டன் ரோகித் (8) அணியை கைவிட்டார். சுப்மன் 23 ரன் எடுக்க, ஜெய்ஸ்வால் 77 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 17 ரன் எடுத்தார். ரிஷாப் பன்ட் 'டக்' அவுட்டானார். வாஷிங்டன் 21, அஷ்வின் 18 ரன் எடுத்து திரும்பினர். கடைசியில் ஜடேஜா (42) அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 113 ரன்னில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை (2-0) என கைப்பற்றியது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''டெஸ்ட் தொடரை இழந்தது ஏமாற்றமாக உள்ளது. இதை எதிர்பார்க்கவில்லை. எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம். அது போல ரன் குவிப்பதும் அவசியம். ஆனால், பேட்டிங்கில் சோபிக்க தவறினோம். யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை. தோல்வி பற்றி 'போஸ்ட்மார்ட்டம்' செய்வது எனது வழக்கம் அல்ல. பேட்டர்கள் சரியான திட்டத்துடன் களமிறங்க வேண்டும். நம்பிக்கை வைத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த தோல்வியாக பார்க்கிறேன். பேட்டர் அல்லது பவுலர்கள் மீது பழிசுமத்த விரும்பவில்லை.எதையும் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. சில வீரர்களிடம் பேச வேண்டும். அவர்களிடம், அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை விளக்க வேண்டும். இந்திய மண்ணில் 80 சதவீத டெஸ்ட் போட்டிகளில் வென்றிருக்கிறோம். இது போன்ற நல்ல விஷயங்களை பேசுவோம். உலக டெஸ்ட் பைனலுக்கு முன்னேறுவதில் பாதிப்பு ஏற்படுமா என்பதை இப்போதே கூற முடியாது. மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற முயற்சிப்போம்,''என்றார்.அஷ்வினுக்கு ஆதரவுபுனே டெஸ்டில் 'சுழலில்' மிரட்டிய சான்ட்னர் 13 விக்கெட் (7+6) கைப்பற்றி, நியூசிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தியாவின் வாஷிங்டன் 11 விக்கெட் (7+4) சாய்த்தார். ஆனால், அனுபவ 'ஸ்பின்னர்'கள் அஷ்வின் (3+2), ஜடேஜா (0+3) ஏமாற்றினர்.இது பற்றி ரோகித் கூறுகையில்,''கடந்த 18 டெஸ்ட் தொடர் வெற்றியில் அஷ்வின், ஜடேஜா முக்கிய பங்கு வகித்தனர். இருவர் மீதும் எதிர்பார்ப்பு அதிகம். சில போட்டிகளில் சோபிக்க முடியாமல் போகலாம். இவர்களது செயல்பாடு பற்றி ஆராய விரும்பவில்லை. வாஷிங்டன் சிறப்பாக பந்துவீசினார்,''என்றார்.வருமா பாக்., பார்முலாஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோற்றது. இதையடுத்து நட்சத்திர பேட்டர் பாபர் ஆசம், 'வேகப்புயல்' ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா நீக்கப்பட்டனர். 'ஸ்பின்னர்' சஜித் கான், நோமன் அலி சேர்க்கப்பட்டனர். இந்த மாற்றம் நல்ல பலனை தந்தது. 2, 3வது டெஸ்டில் சஜித், நோமன் சேர்ந்து 39 விக்கெட் கைப்பற்ற, பாகிஸ்தான் வரிசையாக 2 வெற்றி பெற்றது.இதே போல நியூசிலாந்துக்கு எதிராக சோபிக்காத இந்திய கேப்டன் ரோகித் (2 போட்டியில் 2, 52, 0, 8, என 62 ரன், சராசரி 15.50) 'சீனியர்' கோலிக்கு ( 2 போட்டியில் 0, 70, 1, 17 என 88 ரன், சராசரி 22.00) சின்ன 'பிரேக்' கொடுக்கலாம். இவர்கள் ஓய்வு பெற வேண்டும்; ருதுராஜ், ரஜத் படிதார் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென 'நெட்டிசன்கள்' வலியுறுத்தியுள்ளனர்.