உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய அணிக்கு செக் வைத்த டக்கெட் * லீட்ஸ் டெஸ்டில் பரிதாப தோல்வி

இந்திய அணிக்கு செக் வைத்த டக்கெட் * லீட்ஸ் டெஸ்டில் பரிதாப தோல்வி

லீட்ஸ்: லீட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் கனவுக்கு பென் டக்கெட் வேட்டு வைத்தார். இவரது சதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் சுப்மன், ஜெய்ஸ்வால், ராகுல், ரிஷாப் (2) என 5 சதம் அடித்தது, பும்ரா 5 விக்கெட் (முதல் இன்னிங்ஸ்) வீழ்த்தியது, வலுவான இலக்கு நிர்ணயித்தது எல்லாம் வீணானது. பல 'கேட்ச்'களை கோட்டைவிட்டது. நேற்றைய முதல் 'செஷனில்' பவுலர்கள் சொதப்பியது போன்றவை இந்திய தோல்விக்கு காரணமாக அமைந்தன. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 471, இங்கிலாந்து 465 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன் எடுக்க, இங்கிலாந்துக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 21/0 ரன் எடுத்து, 350 ரன் பின்தங்கியிருந்தது. வலுவான அடித்தளம்நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. டக்கெட், கிராவ்லே விவேகமாக விளையாடினர். பும்ராவுக்கு எதிராக 'ரிஸ்க்' எடுக்க கூடாது; மற்ற இந்திய பவுலர்களை விளாச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதற்கு ஏற்ப மற்ற 'வேகங்கள்' ஆரம்பத்தில் தடுமாறினர். இந்திய பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல், பவுண்டரி அருகே வந்து 'அட்வைஸ்' செய்யும் நிலை ஏற்பட்டது. ஜடேஜாவின் 'சுழலும்' எடுபடவில்லை. முக்கியமான முதல் 'செஷனில்' இங்கிலாந்து அணி ஓவருக்கு 4 ரன் வீதம் 96 ரன் எடுத்து, ஆதிக்கம் செலுத்தியது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 117/0 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 'மிஸ்'இதற்கு பின் ஜடேஜா ஓவரில் 2 பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார் டக்கெட். சிராஜ் பந்தில் டக்கெட் (97 ரன்னில்) கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் இருந்து ஓடி வந்து பிடிக்க முற்பட்ட ஜெய்ஸ்வால் கோட்டைவிட்டார். இது இந்த டெஸ்டில் ஜெய்ஸ்வால் 'மிஸ்' செய்த நான்காவது 'கேட்ச்'. ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய டக்கெட், டெஸ்டில் 6வது சதம் அடித்தார். நழுவிய 'ஹாட்ரிக்'இங்கிலாந்து அணி 181/0 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது. 22 நிமிட தாமதத்திற்கு பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' கிராவ்லே (65) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய கிருஷ்ணா பந்தில் போப் (8) போல்டானார். ஜடேஜா பந்தில் 'ஸ்விட்ச் ஹிட்' மூலம் சிக்சர் அடித்தார் டக்கெட். இந்த நேரத்தில் பந்துவீச வந்த ஷர்துல் தாகூர் (55வது ஓவர்) மிரட்டினார். 3வது பந்தில் டக்கெட்டை (149, 21x4, 1x6) அவுட்டாக்கினார். 4வது பந்தில் புரூக்கை (0) வெளியேற்றினார். அடுத்த பந்தில் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 ரன் எடுக்க, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 269/4 ரன் எடுத்திருந்தது. மீண்டும் மழை பெய்ய, ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், ஆட்டம் ஆரம்பமானது. ஜடேஜா 'சுழலில்' ஸ்டோக்ஸ் (33) சிக்கினார். ஜோ ரூட் அரைசதம்அனுபவ ஜோ ரூட், ஜேமி ஸ்மித் பொறுப்பாக ஆடினர். அரைசதம் கடந்த ரூட், அணியை கரை சேர்த்தார். ஜடேஜா ஓவரில் (82) ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஸ்மித், கடைசி பந்தையும் சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 373/5 ரன் எடுத்து வென்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ரூட் (53), ஸ்மித் (44) அவுட்டாகாமல் இருந்தனர்.இரங்கல்இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' திலிப் தோஷி மறைவுக்கு இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று போட்டி துவங்கும் முன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அதிக ரன், முதல் வீரர்...இந்தியாவுக்கு எதிராக நான்காவது இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரரானார் டக்கெட் (149). அடுத்த இடத்தில் ஜோ ரூட் (142*, எட்ஜ்பாஸ்டன், 2022) உள்ளார்.* லீட்சின் ஹெடிங்லியில் கடந்த 30 ஆண்டுகளில் இரு இன்னிங்சிலும் 50+ ரன் எடுத்த இரண்டாவது இங்கிலாந்து துவக்க வீரரானார் டக்கெட் (62, 149). இதற்கு முன் அலெஸ்டர் குக் (75, 56, எதிர், நியூசி., 2015) இப்படி அசத்தினார்.* ஹெடிங்லியில் நான்காவது இன்னிங்சில் ஹெய்ன்ஸ், கிரீனிட்ஜிற்கு (வெ.இ., 106 ரன், 1984, எதிர், இங்கி.,) பிறகு துவக்க ஜோடியாக 100+ ரன் சேர்த்தனர் டக்கெட், கிராவ்லே (188 ரன்). * ஹெடிங்லியில், நான்காவது இன்னிங்சில் இரு துவக்க வீரர்களும் (டக்கெட்-149, கிராவ்லே-65) 50 + ரன் எடுப்பது முதல் முறையாக அரங்கேறியது.* அலெஸ்டர் குக்கிற்கு (109 ரன், எதிர், வங்கம், மிர்புர், 2010) பின் நான்காவது இன்னிங்சில் சதம் அடித்த முதல் இங்கிலாந்து துவக்க வீரரானார் டக்கெட்.* டக்கெட்-கிராவ்லே 188 ரன் சேர்த்தனர். இது இந்தியாவுக்கு எதிராக நான்காவது இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன். தப்பினார் ரிஷாப் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ், புரூக் பேட்டிங் செய்தனர். அப்போது பந்தின் நிலை மாறியதாக தெரிவித்த இந்தியாவின் ரிஷாப், அம்பயரிடம் விவாதித்தார். பந்தை சோதித்த அம்பயர், நன்றாக உள்ளதாக தெரிவித்து, மாற்ற மறுத்தார்.இதனால் கோபமான ரிஷாப், அம்பயர் முன் பந்தை தரையில் ஓங்கி அடித்தார். இதுகுறித்து மைதானத்தில் இருந்த அம்பயர்கள் கிறிஸ் கபானி, பால் ரெய்பெல் புகார் தெரிவித்தனர்.இவ்விஷயத்தில், தனது தவறை ஏற்றுக் கொண்டார் ரிஷாப். இதையடுத்து 'மேட்ச் ரெப்ரி' ரிச்சி ரிச்சர்ட்சன், ரிஷாப் மீதான நடவடிக்கையை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 26, 2025 10:02

அசால்ட்டுதான் நாம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். வீரர்கள் தனிப்பட்ட புகழுக்காக விளையாடுகிறார்கள். உதாரணம் பந்த் இரண்டாம் இன்னிங்சில் ஆட்டமில்லாத விதம். தேவை இல்லாது அடித்து ஆடி விக்கெட்டை பொறுப்பில்லாமல் பறி கொடுத்தார். பந்துவீச்சு சுத்தமாக சரியில்லை. தடுப்பு வியூகம் சுத்த மோசம்.


crap
ஜூன் 25, 2025 14:01

8 சிறந்த பேட்ஸ்மேன்களை வைத்திருக்கும் அணியை 2 பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி வெல்ல முடியும். கிருஷ்ணா, ஷர்துல் மிக கேவலமான பந்து வீச்சு. சுப்மன் கில்லின் பீல்டிங் செட்டப் படு மோசம். சிராஜ் மிக மோசமாக பந்து வீசும்போது நல்ல பீல்டிங் செட்டப். சிராஜ் நன்றாக பந்து வீசும் போது படு மோசமான பீல்டிங் செட்டப். என்ன கண்ராவியோ இந்த கதியில் போனால் ஐந்து போட்டிகளிலும் மண்ணை கவ்வ வேண்டியதிருக்கும்


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 25, 2025 10:43

இந்தியாவின் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் ஜெய்ஸ்வால் தான், 4 கேட்ச் தவற விடுவது என்பது கொடுமையிலும் கொடுமை.


நிவேதா
ஜூன் 25, 2025 08:14

மிக அருமையான பிட்ச் தயாரிப்பு. இரு அணிகளுக்கும் சாதகமான பிட்ச். திறமை உள்ளவருக்கு வெற்றி என்ற முறையில் பிட்ச் தயாரிக்க பட்டிருந்தது. இந்திய மற்றும் மற்ற நாடு பிட்ச் பராமரிப்பாளர்கள் அந்த அந்த நாடு ஜெயிக்க பிட்ச் தயாரித்து இரண்டு அல்லது மூன்று நாளில் ஆட்டத்தை முடிக்கிறார்கள். அவர்கள் இதை கற்றுக்கொண்டு பிட்ச் தயாரித்தால் டெஸ்ட் கிரிக்கெட் அழியாமல் இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை