57 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே * தொடரை வென்றது பாக்.,
புலவாயோ: இரண்டாவது 'டி-20' போட்டியில் ஜிம்பாப்வே அணி 57 ரன்னுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி நேற்று, புலவாயோ நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணிக்கு மருமானி (16), பென்னெட் (21) ஜோடி (4.3 ஓவர், 37 ரன்) நல்ல துவக்கம் தந்தது. பின் வந்த கேப்டன் சிக்கந்தர் ராஜா (3), மையர்ஸ் (3) அடுத்தடுத்து அவுட்டாகினர். மற்ற வீரர்களும் ஒற்றை இலக்கில் வெளியேற, ஜிம்பாப்வே அணி 12.4 ஒவரில் 57 ரன்னுக்கு சுருண்டது. பாகிஸ்தானின் சபியன் முகீம் 5 விக்கெட் சாய்த்தார்.எளிய வெற்றிபோகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுப், சைம் அயூப் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. பாகிஸ்தான் அணி 'பவர் பிளே' ஓவர் (5.3 ஓவர்) முடிவதற்குள், விக்கெட் இழப்பின்றி 61 ரன் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பவுண்டரிகளாக விளாசிய அயூப் 36 (18 பந்து, 1x6, 6x4), ஒமைர் (22) அவுட்டாகாமல் இருந்தனர். அடுத்தடுத்து வெற்றி பெற்ற பாகிஸ்தான், 'டி-20' தொடரை 2-0 என கைப்பற்றியது. குறைந்த ஸ்கோர்நேற்று 57 ரன்னில் ஆல் அவுட்டான ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' அரங்கில் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக 2008ல் 107/8 ரன் எடுத்திருந்தது.