தீப்தி சர்மா நம்பர்-2 * ஐ.சி.சி., டி-20 பவுலர் வரிசையில்...
துபாய்: 'டி-20' பவுலர் அரங்கில் இந்தியாவின் தீப்தி சர்மா, 2வது இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டி-20' வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பவுலர்கள் வரிசையில் 732 புள்ளியுடன் இந்திய 'சுழல்' வீராங்கனை தீப்தி சர்மா 27, இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த முன்னேற்றம் கிடைத்தது. 'நம்பர்-1' பவுலராக உள்ள ஆஸ்திரேலியாவின் அனாபெல்லை (736) விட, தீப்தி 4 புள்ளி மட்டும் குறைவாக பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் வரிசையில் தீப்தி (387) தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறார். முதல் இரு இடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஹேலே (505), நியூசிலாந்தின் அமேலியா கெர் (434) உள்ளனர். ஸ்மிருதி 'மூன்று'பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (728) மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரு இடத்தில் பெத் மூனே (794, ஆஸி.,), ஹேலே (774, வெ.இண்டீஸ்) உள்ளனர். மற்ற இந்திய வீராங்கனைகள் ஷைபாலி (9, 655), ஜெமிமா (14, 625), ஹர்மன்பிரீத் கவுர் (16, 613) பின்தங்கியுள்ளனர்.