மன்னித்து விடுங்கள் ரிஷாப் * கிறிஸ் வோக்ஸ் உருக்கம்
லண்டன்: மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்டில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட்டின் வலது கால் பாதத்தில் தாக்கியது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், பேட்டிங் செய்ய களமிறங்கிய ரிஷாப் அரைசதம் அடித்து அவுட்டானார். 5வது டெஸ்டில் விலகினார். இதுபோல ஐந்தாவது டெஸ்டில் பீல்டிங் செய்த போது, இடது தோளில் காயமடைந்தார் வோக்ஸ். அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில், ஒற்றை கையுடன் பேட் செய்ய களமிறங்கினார். ரிஷாப், வோக்சின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்தன. இதனிடையே சமூக வலைத்தளத்தில், வோக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கிய போட்டோவை பதிவு செய்து, 'எல்லாம் சரியாகி விடும். உங்கள் காயம் குணமடைய வாழ்த்துகிறேன். மீண்டும் சர்வதேச அரங்கில் ஒருநாள் சந்திப்போம், 'சல்யூட்' என தெரிவித்து இருந்தார் ரிஷாப். இதுகுறித்து வோக்ஸ் கூறுகையில்,'' உங்கள் அன்புக்கு நன்றி, எனது பந்துவீச்சில் உங்கள் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு மன்னித்து விடுங்கள். கால் காயம் விரைவில் சரியாகும் என நம்புகிறேன்,'' என்றார்.சந்தேகம்ரிஷாப் காயம் சரியாக குறைந்தது ஆறு வாரம் தேவைப்படும். இதனால் வரும் ஆசிய கோப்பை (செப். 9-28), சொந்தமண்ணில் நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் (அக். 2-14) ரிஷாப் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.