உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / முதல் நாள் அன்று...குல்தீப் மூன்று * இந்தியா அபார பந்துவீச்சு

முதல் நாள் அன்று...குல்தீப் மூன்று * இந்தியா அபார பந்துவீச்சு

கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்டின் முதல் நாளில் இந்திய பவுலர்கள் அசத்தினர். மூன்று விக்கெட் சாய்த்த குல்தீப் யாதவ், தென் ஆப்ரிக்க அணிக்கு 'செக்' வைத்தார். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் துவங்கியது. சுதர்சன் வாய்ப்புஇந்திய அணியில் சுப்மன் கில், அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் சாய் சுதர்சன், நிதிஷ் குமார் வாய்ப்பு பெற்றனர். தென் ஆப்ரிக்க அணியில் கார்பின் பாஷ் நீக்கப்பட்டு, தமிழக வம்சாவளி வீரரான சேனுரன் முத்துசாமி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற கேப்டன் பவுமா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். கவுகாத்தியில் சூரியன் விரைவாக உதிக்கும் என்பதால், காலை 9:00 மணிக்கு ஆட்டம் துவங்கியது. விக்கெட் சரிவுதென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம், ரிக்கிள்டன் நல்ல துவக்கம் தந்தனர். பும்ரா பந்தில் மார்க்ரம் (4 ரன்னில்) கொடுத்த சுலப 'கேட்ச்சை' 2வது 'ஸ்லிப்பில்' நின்ற ராகுல் கோட்டைவிட்டார். 82/0 என வலுவாக இருந்தது. இந்த சமயத்தில், பும்ரா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது 'வேகத்தில்' மார்க்ரம் (38) போல்டானார். குல்தீப் 'சுழலில்' ரிக்கிள்டன் (35) சிக்கினார். பின் கேப்டன் பவுமா, ஸ்டப்ஸ் நிதானமாக ஆடினர். ஜடேஜா வலையில் பவுமா (41) அவுட்டாக, நிம்மதி பிறந்தது. குல்தீப் பந்துவீச்சில் ஸ்டப்ஸ் (49), முல்டர் (13) வெளியேற, போட்டி இந்தியா பக்கம் மாறியது. முத்துசாமி, ஜோர்ஜி சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். குல்தீப் ஓவரில் ஜோர்ஜி ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். சிராஜ் 'வேகத்தில்' ஜோர்ஜி (28) பெவிலியன் திரும்பினார். போதிய வெளிச்சம் இல்லாததால், ஆட்டம் முன்னதாக முடிந்தது. தென் ஆப்ரிக்க அணி முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 247/6 ரன் எடுத்திருந்தது. முத்துசாமி (25), கைல் (1) அவுட்டகாமல் இருந்தனர்.இன்று எஞ்சிய தென் ஆப்ரிக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும். பின் இந்திய பேட்டர்கள் பொறுப்பாக ஆடி வலுவான ஸ்கோரை எட்ட வேண்டும். 38வது கேப்டன்'ரெகுலர்' கேப்டன் சுப்மன் கில் (கழுத்து பகுதி காயம்) விலகிய நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பை முதல் முறையாக ரிஷாப் பன்ட் ஏற்றார். இந்திய அணியின் 38வது டெஸ்ட் கேப்டன் ஆனார். கடந்த 12 மாதங்களில் ரோகித், பும்ரா, சுப்மனுக்கு பின் 4வது இந்திய டெஸ்ட் கேப்டன் ஆனார். * தோனிக்கு (60 டெஸ்ட், 2008-2014) அடுத்து இந்திய அணியை டெஸ்டில் வழிநடத்தும் இரண்டாவது விக்கெட் கீப்பரானார் ரிஷாப்.* கடந்த 9 டெஸ்டில் இந்திய அணி 8ல் 'டாஸ்' வெல்ல தவறியது. * அசாமின் கவுகாத்தி பர்சாபரா மைதானத்தில் முதல் முறையாக டெஸ்ட் நடக்கிறது. நாட்டின் 30வது டெஸ்ட் மைதானம் என்ற பெருமையை பெற்றது.பவுமா 1000 ரன்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 1000 ரன் கடந்த முதல் தென் ஆப்ரிக்க கேப்டன் ஆனார் பவுமா (12 போட்டி, 1005 ரன்). உலக அளவில் இம்மைல்கல்லை எட்டிய 9வது கேப்டன். முதலிடத்தில் ஜோ ரூட் (இங்கி., 32 போட்டி, 2835 ரன்) உள்ளார். * டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணியின் 'டாப்-4' பேட்டர்கள் 35+ ரன் எடுத்தும், ஒருவர் கூட 50+ ரன் எட்டாதது முதல் முறையாக நேற்று அரங்கேறியது. தென் ஆப்ரிக்க அணியின் 'டாப்-4' பேட்டர்களான மார்க்ரம் 38, ரிக்கிள்டன் 35, ஸ்டப்ஸ் 49, பவுமா 41 ரன் எடுத்தனர். ஆடுகளம் மாறுமாகோல்கட்டா ஆடுகளம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கவுகாத்தி ஆடுகளம் பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பேட்டர்களுக்கு பிரச்னை கொடுக்கவில்லை. 'வேகம்', 'ஸ்பின்னர்'களுக்கு ஒத்துழைத்தது. இதனால் தான் இந்திய அணியில் 2 'வேகம்', 3 'ஸ்பின்னர்', ஒரு வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டெஸ்காட்டே கூறுகையில்,''இந்திய அணியின் வீரர்கள் தேர்வுக்கு ஏற்ப ஆடுகளம் உள்ளது. 'சுழலில்' குல்தீப் அசத்தினார். ஆடுகளத்தில் இன்னும் வெடிப்பு ஏற்படவில்லை. இதே நிலை இந்திய அணி பேட் செய்யும் போதும் தொடர வேண்டும். முதல் இன்னிங்சில் வலுவான ஸ்கோரை எட்டுவது அவசியம். ஏனெனில் 3,4வது இன்னிங்சில் பேட் செய்வது கடினமாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ