டி-20 உலக கோப்பை: வெளியானது அட்டவணை
மும்பை: இந்தியா, இலங்கையில், 'டி-20' உலக கோப்பை 10வது சீசன், அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-மார்ச் 8ல் நடக்கவுள்ளது. மொத்தம் 55 போட்டிகள் நடக்கும். இந்தியாவில் ஆமதாபாத், டில்லி, கோல்கட்டா, சென்னை, மும்பையில் போட்டிகள் நடக்க உள்ளன. ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் பைனல் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும்.இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார்.இதன் படி நடப்பு உலக சாம்பியன் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவை (பிப். 7) சந்திக்க உள்ளது. அடுத்து நமீபியா (பிப். 12), பாகிஸ்தான் (பிப். 15) அணிகளை எதிர்கொள்கிறது. கடைசி போட்டியில் நெதர்லாந்துடன் (பிப். 18) மோதுகிறது.தொடரை நடத்தும் மற்றொரு அணியான இலங்கை, 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், ஜிம்பாப்வேயுடன் இடம் பெற்றுள்ளது.'சி' பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், இத்தாலி, நேபாளம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. 'டி' பிரிவில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, எமிரேட்ஸ் அணிகள் உள்ளன.துாதர் ரோகித்இந்திய அணிக்கு 2024ல் 'டி-20' உலக கோப்பை, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி (ஒருநாள்) வென்று தந்தவர் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 38. வரும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கான துாதராக, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.