ஈஸியான வெற்றியை நோக்கி இந்தியா... * இன்னும் 58 ரன் மட்டும் தேவை
புதுடில்லி: டில்லி டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இன்னும் 58 ரன் மட்டுமே தேவை என்பதால், இன்று காலை சுலப வெற்றி பெற்று, தொடரை 2-0 என கைப்பற்ற காத்திருக்கிறது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 'பாலோ-ஆன்' பெற்றது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது நாள் முடிவில் 173/2 ரன் எடுத்து, 97 ரன் பின்தங்கியிருந்தது. ஹோப் சதம்நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு ஜான் கேம்பல், ஷாய் ஹோப் தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு 177 ரன் சேர்த்தனர். ஆடுகளம் மந்தமாக இருந்ததால், இந்திய வீரர்கள் கை வலிக்க பந்துவீச நேர்ந்தது. ரவிந்திர ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கேம்பல், டெஸ்ட் அரங்கில் முதல் சதம் எட்டினார். சிறிது நேரத்தில் ஜடேஜா 'சுழலில்' கேம்பல் (115, 12X4, 3X6) எல்.பி.டபிள்யு., ஆக, நிம்மதி பிறந்தது. மறுபக்கம் சிராஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹோப், டெஸ்டில் 3வது சதம் கடந்தார். இவர் 103 ரன்னுக்கு (12X4, 2X6) சிராஜ் 'வேகத்தில்' வெளியேறினார். குல்தீப் அசத்தல்பின் குல்தீப் 'சுழல்' ஜாலம் நிகழ்த்தினார். இவரது வலையில் டெவின் இம்லாச் (12) அவுட்டானார். தனது ஒரே ஓவரில் (92வது) கேப்டன் ராஸ்டன் சேஸ் (40), பியர்ரியை (0) பெவிலியனுக்கு அனுப்பினார் குல்தீப். கடைசி கட்டத்தில் பும்ரா மிரட்டினார். இவரது பந்தில் வாரிகன் (3) போல்டானார். ஆண்டர்சனையும் (2) அவுட்டாக்கினார். ஜஸ்டின் கிரிவ்ஸ், ஜேடன் சீல்ஸ் சேர்ந்து 10வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்க்க, நான்காவது நாளில் வெற்றி பெறும் இந்தியாவின் வாய்ப்பு நழுவியது. கிரிவ்ஸ் அரைசதம் (50*) எட்டினார். பும்ரா பந்தில் சீல்ஸ் (32) ஒருவழியாக அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு 121 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ராகுல் காயம்சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி. முதல் இன்னிங்சில் 175 ரன் விளாசிய ஜெய்ஸ்வால், இம்முறை 8 ரன்னுக்கு வாரிகன் பந்தில் அவுட்டானார். பின் சீல்ஸ் வீசிய பந்து ராகுலின் 'அந்த' இடத்தை பதம் பார்க்க வலியால் துடித்தார். 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளிக்க, சிறிது நேரத்திற்கு பின் பேட்டிங்கை தொடர்ந்தார். நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 63/1 ரன் எடுத்திருந்தது. ராகுல் (25), சுதர்சன் (30) அவுட்டாகாமல் இருந்தனர். வெற்றிக்கு இன்னும் 58 ரன் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் இருப்பதால், இன்று காலை இந்திய அணி சுலப வெற்றியை ருசிக்கும். சபாஷ் கேம்பல்இந்தியாவில் 23 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் துவக்க பேட்டரானார் கேம்பல். கடைசியாக வேவல் ஹைண்ட்ஸ் (100, ஈடன் கார்டன், 2002) சதம் அடித்தார். கேம்பல் கூறுகையில்,''டெஸ்டில் முதல் சதம் எட்டிய அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. சரியான 'ஷாட்' தேர்வு செய்து விளையாடினேன்,''என்றார். சிராஜ் 'டாப்'நேற்று ஹோப்பை அவுட்டாக்கிய இந்தியாவின் சிராஜ், 2025ல் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் (8 போட்டி, 37 விக்கெட்) பிடித்தார். அடுத்த இரு இடங்களில் ஜிம்பாப்வேயின் பிளஸ்சிங் முசரபாணி (9 போட்டி, 36 விக்), ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (7 போட்டி, 29 விக்.,) உள்ளனர்.79 ரன் நேற்று கிரிவ்ஸ், சீல்ஸ் சேர்ந்து 10வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தனர். இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் கடைசி விக்கெட்டுக்கு 50+ ரன் எடுக்கப்பட்டன. கடைசியாக ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க்-ஹேசல்வுட் சேர்ந்து 55 ரன் (புனே, 2017) எடுத்தனர்.