நியூசிலாந்து அணி ஆதிக்கம் * வெஸ்ட் இண்டீஸ் திணறல்
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 231, வெஸ்ட் இண்டீஸ் 167 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 414/4 ரன் எடுத்து, 481 ரன் முன்னிலை பெற்றிருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. வில் யங் (23), மைக்கேல் பிரேஸ்வெல் (24) அடுத்தடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 466/8 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. வெஸ்ட் இண்டீசின் கீமர் ரோச், 5 விக்கெட் சாய்த்தார். கடின இலக்குவெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 531 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது. கேம்பெல் (15), டகநரைன் (6), அதானசே (5), கேப்டன் சேஸ் (4) அவுட்டாக 72/4 ரன் என திணறியது. பின் இணைந்த ஷாய் ஹோப், கிரீவ்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. டெஸ்டில் 4வது சதம் அடித்தார் ஹோப். நான்காவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 212/4 ரன் எடுத்து, 319 ரன் பின்தங்கி இருந்தது. ஹோப் (116), கிரீவ்ஸ் (55) அவுட்டாகாமல் இருந்தனர். 6 விக்கெட்டுகள் மட்டும் உள்ள நிலையில் கடைசி நாளான இன்று, வெஸ்ட் இண்டீஸ் தப்புவது கடினம்.