உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோல்கட்டா அணியில் டுவைன் பிராவோ: ஆலோசகராக நியமனம்

கோல்கட்டா அணியில் டுவைன் பிராவோ: ஆலோசகராக நியமனம்

புதுடில்லி: கோல்கட்டா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் டுவைன் பிராவோ. கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' டுவைன் பிராவோ, 40. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக நீண்ட காலம் (2011-2022) விளையாடினார். 2023ல் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளராக அசத்தினார். 2024ல் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆலோசகராக பணியாற்றினார்.ரசிகர்கள் அதிர்ச்சி: சென்னை அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கோல்கட்டா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் பிராவோ. இது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே கோல்கட்டா ஆலோசகராக இருந்த காம்பிர், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார். 2021ல் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்ற பிராவோ, அனைத்துவித கிரிக்கெட்டிலும் இருந்து நேற்று ஓய்வை அறிவித்தார். 'குட்-பை' நேரம்: பிராவோ கூறுகையில்,''21 ஆண்டு கிரிக்கெட் பயணத்தில் அதிக ஏற்றங்களையும் குறைவான இறக்கங்களையும் சந்தித்துள்ளேன். களத்தில் நுாறு சதவீத திறமை வெளிப்படுத்தியதால், போட்டிகளில் எனது கனவை எட்டினேன். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்த கிரிக்கெட்டுக்கு 'குட்-பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது. கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். இதனால் கோல்கட்டா நிர்வாகத்துடன் நல்ல பழக்கம் உண்டு. குடும்பத்தில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படும். அடுத்து, ஆலோசகர் பணியில் அசத்த காத்திருக்கிறேன்,'' என்றார்.கோல்கட்ட அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி கூறுகையில்,''பிராவோவின் அனுபவம் கோல்கட்டா வீரர்களுக்கு பயன் அளிக்கும். கோல்கட்டா நிர்வாகத்தின் கீழ் மற்ற நாடுகளில் செயல்படும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் பொறுப்பாளராக பிராவோ செயல்படுவார்,'' என்றார்.631 விக்கெட்'டி-20' அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் டுவைன் பிராவோ (631) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ஆப்கன் வீரர் ரஷித் கான் (448 போட்டி, 613 விக்.,) உள்ளார். பிராவோ மொத்தம் 582 'டி-20' போட்டிகளில் 631 விக்கெட், 275 'கேட்ச்', 6970 ரன் எடுத்துள்ளார்.* 'டி-20' போட்டியில் 'டெத்-ஓவர் ஸ்பெஷலிஸ்ட்' வீரரான பிராவோ, கடைசி 4 ஓவர்களில் மட்டும் 322 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான் (201) உள்ளார்.* உலகம் முழுவதும் 28 அணிகளுக்கு விளையாடி உள்ளார் பிராவோ. சென்னை அணிக்கு அதிகபட்சமாக 130 போட்டிகளில் (1280 ரன், 154 விக்கெட்) பங்கேற்ற இவர், நான்கு முறை கோப்பை வெல்ல கைகொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ