பிரிஸ்பேன்: பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்து பேட்டர்கள் மீண்டும் ஏமாற்றினர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக பிரிஸ்பேனில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 378/6 ரன் எடுத்திருந்தது. கேரி (46), நேசர் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் 'வேகத்தில்' மைக்கேல் நேசர் (16) வெளியேறினார். அலெக்ஸ் கேரி (63) அரைசதம் கடந்தார். அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் (77 ரன், 13x4), தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. 177 ரன் முன்னிலை பெற்றது. போலந்து (21) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 4, ஸ்டோக்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.பின், 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு, ஆஸ்திரேலிய பவுலர்கள் தொல்லை தந்தனர். ஸ்காட் போலந்து பந்தில் பென் டக்கெட் (15), ஹாரி புரூக் (15) அவுட்டாகினர். மைக்கேல் நேசர் 'வேகத்தில்' போப் (26), ஜாக் கிராலே (44) வெளியேறினர். அடுத்து வந்த ஜோ ரூட் (15), ஜேமி ஸ்மித் (4), ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தனர்.ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 134/6 ரன் எடுத்து, 43 ரன் பின்தங்கி இருந்தது. கேப்டன் ஸ்டோக்ஸ் (4), வில் ஜாக்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், நேசர், போலந்து தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்தினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம்.மூன்றாவது முறை150 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் 3வது முறையாக, 11 ஆஸ்திரேலிய வீரர்களும் ஒரு இன்னிங்சில் இரட்டை இலக்க ரன் எடுத்தனர். இதில் 5 பேர் அரைசதம் விளாசினர்.கம்மின்ஸ் வழியில்...டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டை அதிக முறை (11) அவுட்டாக்கிய பவுலர்கள் பட்டியலில் கம்மின்ஸ் (ஆஸி.,), பும்ராவுடன் (இந்தியா) முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்டார்க். அடுத்த இரு இடத்தில் ஹேசல்வுட் (ஆஸி., 10 முறை), ஜடேஜா (இந்தியா, 9 முறை) உள்ளனர்.