உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அரையிறுதியில் இந்தியா ஏ: அபிஷேக் சர்மா அரைசதம்

அரையிறுதியில் இந்தியா ஏ: அபிஷேக் சர்மா அரைசதம்

மஸ்கட்: அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க இந்தியா 'ஏ' அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் யு.ஏ.இ., அணியை வீழ்த்தியது.ஓமனில், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 6வது சீசன் நடக்கிறது. 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த யு.ஏ.இ., யு.ஏ.இ., அணி 40 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த ராகுல் சோப்ரா, கேப்டன் பசில் ஹமீத் ஜோடி ஆறுதல் தந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்த போது ஹமீத் (22) அவுட்டானார். ராகுல் சகார் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராகுல் சோப்ரா, 45 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.யு.ஏ.இ., அணி 16.5 ஓவரில் 107 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'ஏ' சார்பில் ராசிக் சலாம் 3, ராமன்தீப் சிங் 2 விக்கெட் சாய்த்தனர்.சுலப இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (8) ஏமாற்றினார். பசில் ஹமீத் வீசிய 2வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசிய அபிஷேக் சர்மா, 20 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்த போது திலக் வர்மா (21) அவுட்டானார். அபாரமாக ஆடிய அபிஷேக், 24 பந்தில் 58 ரன் (4 சிக்சர், 6 பவுண்டரி) விளாசினார்.ஜவாதுல்லா பந்தில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஆயுஷ் படோனி வெற்றியை உறுதி செய்தார். இந்தியா 'ஏ' அணி 10.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நேஹல் வதேரா (6), படோனி (12) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா 'ஏ' அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ