இந்திய பவுலர்கள் திண்டாட்டம்: இங்கிலாந்து கலக்கல் ஆட்டம்
மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய பவுலர்கள் சொதப்பினர். ஜோ ரூட் சதம் விளாச, இங்கிலாந்து வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது.ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' தொடரில் இங்கிலாந்து அணி, 2--1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து 225/2 எடுத்து, 133 ரன் பின்தங்கியிருந்தது.மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய 'வேகங்கள்' தடுமாறினர். ஆரம்பத்தில் 'லெக்' திசையில் பந்துவீசி ரன்னை வாரி வழங்கினர். தொடர்ந்து துல்லியமாக பந்துவீச தவற, அனுபவ ஜோ ரூட், போப் சுலபமாக ரன் சேர்த்தனர். பும்ரா, கம்போஜ் ஓவரில் சாதாரணமாக பவுண்டரிகள் விளாசினர். இந்த சமயத்தில் கேப்டன் சுப்மன் கில் 'ஸ்பின்னர்'களை பயன்படுத்தாமல் தவறு செய்தார். டெஸ்டில் போப், தனது 16வது அரைசதம் எட்டினார். வாஷிங்டன் 2 விக்.,: மூன்றாவது விக்கெட்டுக்கு ரூட்-போப் 144 ரன் சேர்த்த நிலையில், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது 'சுழல்' வலையில் முதலில் போப் (71) சிக்கினார். சிறிது நேரத்தில் ஹாரி புரூக்கையும் (3) அவுட்டாக்கினார். பின் ரூட், கேப்டன் ஸ்டோக்ஸ் விவேகமாக விளையாடினர். கம்போஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரூட், டெஸ்டில் 38வது சதம் அடித்தார். ஸ்டோக்ஸ் 66 ரன்னில்'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார். ரூட், 150 ரன் எடுத்திருந்த போது ஜடேஜா 'சுழலில்' சிக்கினார். சிராஜ் பந்தில் வோக்ஸ் (4) போல்டாக, மீண்டும் களமிறங்கினார் ஸ்டோக்ஸ். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 544/7 ரன் எடுத்து, 186 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஸ்டோக்ஸ் (77), டாசன் (21) அவுட்டாகாமல் இருந்தனர். மாற்று வீரர் அவசியம்மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாளில் வோக்ஸ் பந்தை 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்ய முயன்றார் ரிஷாப் பன்ட். அப்போது, வலது கால் பாதத்தில் பந்து பலமாக தாக்கியதில், விரல் எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. 37 ரன்னில் 'ரிட்டையர்ட் ஹர்ட்' ஆனார். இரண்டாவது நாளில் வலியை பொருட்படுத்தாது துணிச்சலாக களமிறங்கினார். 70 நிமிடத்தில் 28 பந்தை சந்தித்து கூடுதலாக 17 ரன் எடுத்தார். டெஸ்டில் 18வது அரைசதம் (54) அடித்து அவுட்டானார். இது பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில்,''ரிஷாப் பன்ட் முழு உடற்தகுதியுடன் இல்லை. அவரால் ஓட முடியவில்லை. காயத்தின் தன்மை அதிகரித்துவிடும் அபாயம் இருந்தது. இவருக்கு மாற்றாக விக்கெட்கீப்பர் களமிறங்கலாம். ஆனால் பேட்டிங் அல்லது பவுலிங் செய்ய முடியாது. இந்த வினோதமான விதிமுறை கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது. இன்னும் இருண்ட காலத்திலேயே இருக்கிறது. போட்டியின் போது ஒரு வீரருக்கு மோசமான காயம் ஏற்பட்டதை 'ஸ்கேன்', டாக்டரின் அறிக்கை உறுதி செய்தால், அவருக்கு நிகரான மாற்று வீரரை விளையாட அனுமதிக்க வேண்டும். 'ஹெல்மெட்டில்' பந்து தாக்கி, மூளை அதிர்வு ஏற்பட்டால் மட்டும் மாற்று வீரருக்கு அனுமதிக்கின்றனர். இதே போல காயம் அடையும் வீரர் பேட்டர் என்றால் பேட்டர், ஸ்பின்னர் என்றால் ஸ்பின்னர் என்ற அடிப்படையில் முழுமையான மாற்று வீரருக்கு அனுமதி அளிக்க வேண்டும்.வோக்ஸ் பந்தில் முட்டாள்தனமான 'ஷாட்' அடித்து காயம் அடைந்தார் ரிஷாப். வழக்கமான கிரிக்கெட் 'ஷாட்' அடித்திருந்திருக்கலாம். இவர் காயத்துடன் பேட் செய்ய களமிறங்கியது பாராட்டுக்குரியது,''என்றார்.வருவாரா ரிஷாப் இந்திய வீரர் ஷர்துல் தாகூர் கூறுகையில்,''கடும் வலியுடன் களமிறங்கி அணிக்காக ரன் சேர்த்தார் ரிஷாப் பன்ட். இரண்டாவது இன்னிங்சில் இவர் பேட் செய்வது பற்றி மருத்துவ குழுவினர் முடிவு எடுப்பர். முதலில் நன்கு நடக்க வேண்டும். அதன் பின் பேட் செய்வது பற்றி ஆலோசிக்கப்படும்,''என்றார்.மனதில் உறுதிஇந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''இரும்பு போன்ற மன உறுதி கொண்டவர் ரிஷாப் பன்ட். இவர் களமிறங்கிய போது இங்கிலாந்து அணியினர் உட்பட அனைவரும் வரவேற்பு அளித்தனர். ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் உத்வேகம் அளித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இவரது விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. மான்செஸ்டர் டெஸ்டில் கீப்பர்-பேட்டராக விளையாட முடியுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு, 'விரல் எலும்பில் முறிவு ஏற்பட்டாலும் கூட விளையாடுவேன்' என அழுத்தமாக கூறினார். அந்த அளவுக்கு நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்,''என்றார்.