உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய பெண்கள் அணி சாம்பியன்: முதல் உலக கோப்பை வென்று வரலாறு

இந்திய பெண்கள் அணி சாம்பியன்: முதல் உலக கோப்பை வென்று வரலாறு

நவி மும்பை: இந்திய பெண்கள் அணி முதன்முறையாக உலக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. ஷைபாலி வர்மா (87), தீப்தி சர்மாவின் (58 ரன், 5 விக்கெட்) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, பைனலில் 52 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா ஏமாற்றியது.இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடந்தது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.மழையால் தாமதம்: மழையால் போட்டி 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது. ஓவர் குறைக்கப்படவில்லை. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஷைபாலி அபாரம்: இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது டிரையான் பந்தில் ஸ்மிருதி (45) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஷைபாலி, 49 பந்தில் அரைசதம் எட்டினார். ஷைபாலி (87 ரன், 2x6, 7x4) கைகொடுத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) நிலைக்கவில்லை. மறுமுனையில் அசத்திய தீப்தி சர்மா, அரைசதத்தை பதிவு செய்தார். ரிச்சா கோஷ் (34) நம்பிக்கை தந்தார். கடைசி பந்தில் தீப்தி (58) 'ரன்-அவுட்' ஆனார்.இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 298 ரன் எடுத்தது. ராதா யாதவ் (3) அவுட்டாகாமல் இருந்தார்.தீப்தி அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு தஸ்னிம் பிரிட்ஸ் (23), சுனே லஸ் (25) சோபிக்கவில்லை. மரிஜான்னே காப் (4), சினாலோ ஜப்தா (16) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 148 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த கேப்டன் லாரா வால்வார்ட், டெர்க்சன் ஜோடி நம்பிக்கை தந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது தீப்தி சர்மா பந்தில் டெர்க்சன் (35) போல்டானார். மறுமுனையில் அசத்திய லாரா, ஒருநாள் போட்டியில் தனது 11வது சதத்தை பதிவு செய்தார்.தொடர்ந்து அசத்திய தீப்தி 'சுழலில்' லாரா (101), டிரையான் (9), நாடின் டி கிளார்க் (18) சிக்கினர். தென் ஆப்ரிக்க அணி 45.3 ஓவரில், 246 ரன்னுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் தீபதி சர்மா 5 விக்கெட் சாய்த்தார். சச்சின் வருகைபைனலை காண இந்திய ஜாம்பவான் சச்சின் வந்தார். வெற்றியாளருக்கு வழங்கப்படும் உலக கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வந்தார். 'கேலரியில்' அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.* இந்திய அணி வீராங்கனைகள் அணிவகுத்து நிற்க, பாடகி சுனிதி சவுகான் தேசிய கீதம் பாடினார்.* 'டி-20' உலக கோப்பை (2024) பெற்றுத்தந்த முன்னாள் இந்திய கேப்டன் ரோகித் சர்மா போட்டியை காண வந்திருந்தார்.331 ரன்இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 'நாக்-அவுட்' போட்டியில் அதிக ரன் குவித்த வீராங்கனையானார். இதுவரை 4 இன்னிங்சில், 331 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (330 ரன், 6 இன்னிங்ஸ்) உள்ளார்.இரண்டாவது அதிகம்பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் 2வது அதிகபட்ச ஸ்கோரை (298/7) பதிவு செய்தது இந்தியா. கடந்த 2022ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 356/5 ரன் குவித்ததே அதிகம்.ரூ. 39.50 கோடி பரிசுஉலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 39.50 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவுக்கு ரூ. 19.50 கோடி பரிசு கிடைத்தது. பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 125 கோடி பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஸ்மிருதி '434'இம்முறை அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2வது இடம் பிடித்தார். இவர், 9 போட்டியில், 434 ரன் எடுத்தார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வார்ட் (571 ரன், 9 போட்டி) கைப்பற்றினார்.தீப்தி '22'அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 9 போட்டியில், 22 விக்கெட் சாய்த்தார். அடுத்த இடத்தை ஆஸ்திரேலியாவின் அனாபெல் சுதர்லாந்து (17 விக்கெட்) தட்டிச் சென்றார்.முதன்முறைஇந்திய பெண்கள் அணி முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று வரலாறு படைத்தது. இதற்கு முன், இரண்டு முறை (2005, 2017) பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்தது.* தவிர இது, ஒட்டுமொத்த உலக கோப்பை அரங்கில் (50 ஓவர், 'டி-20') இந்திய பெண்கள் அணிக்கு கிடைத்த முதல் உலக சாம்பியன் பட்டம். இதற்கு முன் 'டி-20' உலக கோப்பையில் 2020ல் பைனல் வரை சென்றிருந்தது.கபில்தேவ் வழியில்...கடந்த 1983ல் இந்திய ஆண்கள் அணிக்கு கபில்தேவ் முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) பெற்றுத்தந்தார். இதுபோல இந்திய பெண்கள் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் சாதித்தார்.* கபில்தேவ் (1983), தோனி (2007ல் 'டி-20', 2011), ரோகித் சர்மாவுக்கு (2024ல் 'டி-20') பின், உலக கோப்பை வென்ற 4வது இந்திய கேப்டன் ஆனார் ஹர்மன்பிரீத் கவுர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை