இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: 331 ரன் சேஸ் செய்து ஆஸி., சாதனை
விசாகப்பட்டனம்: உலக கோப்பை லீக் போட்டியில் பவுலிங்கில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 331 ரன்னை 'சேஸ்' செய்த ஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 155 ரன் சேர்த்த போது சோபி மோலினக்ஸ் பந்தில் மந்தனா (80 ரன், 3x6, 9x4) அவுட்டானார். பிரதிகா, 75 ரன்னில் (1x6, 10x4) ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (22), ஹர்லீன் தியோல் (38), ரிச்சா கோஷ் (32), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (33) ஓரளவு கைகொடுத்தனர்.இந்திய அணி 48.5 ஓவரில், 330 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.கேப்டன் சதம்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு லிட்ச்பீல்டு (40) நல்ல துவக்கம் கொடுத்தார். பெத் மூனே (4), அனாபெல் (0) ஏமாற்றினர். கேப்டன் அலிசா ஹீலி சதம் விளாசினார். இவர், 107 பந்தில் 142 ரன் (3x6, 21x4) அவுட்டானார். தஹ்லியா மெக்ராத் (12), சோபி மோலினக்ஸ் (18) நிலைக்கவில்லை. ஆஷ்லி கார்ட்னர் (45) ஓரளவு கைகொடுத்தார்.'ரிட்டயர்ட் ஹர்ட்டில்' இருந்து திரும்பிய எலிஸ் பெர்ரி, ஸ்னே ராணா பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 331 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெர்ரி (47), கிம் கார்த் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.சாதனை வெற்றி: இதன்மூலம் பெண்கள் ஒருநாள் போட்டி அரங்கில் அதிக ரன்னை (331) 'சேஸ்' செய்து சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. இதற்கு முன் இலங்கை அணி 302 ரன் (எதிர், தென் ஆப்ரிக்கா, 2024) 'சேஸ்' செய்து இருந்தது. முதல் வீராங்கனைஒருநாள் போட்டி அரங்கில், ஒரு ஆண்டில் 1000 ரன்னை எட்டிய முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா. இந்த ஆண்டு 18 போட்டியில், 4 சதம், 4 அரைசதம் உட்பட 1062 ரன் குவித்துள்ளார். இதற்கு முன், 1997ல் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க், 970 ரன் எடுத்ததே அதிகம்.5000 ரன்மந்தனா, தனது 58வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் போட்டியில் 5000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார். இதுவரை 112 போட்டியில், 13 சதம், 33 அரைசதம் உட்பட 5022 ரன் எடுத்துள்ளார். மிதாலிக்கு (7805 ரன்) பின் இம்மைல்கல்லை எட்டிய 2வது இந்திய வீராங்கனையானார் மந்தனா. சர்வதேச அளவில் 5வது வீராங்கனையானார்.* குறைந்த இன்னிங்ஸ் (112), குறைந்த பந்தில் (5569) 5000 ரன்னை எட்டிய வீராங்கனையானார் மந்தனா. இதற்கு முன், வெஸ்ட் இண்டீசின் ஸ்டபானி டெய்லர் (129 இன்னிங்ஸ்), நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் (6182 பந்து) இச்சாதனை படைத்திருந்தனர்.இது அதிகம்ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 330 ரன் குவித்த இந்திய பெண்கள் அணி, உலக கோப்பை (50 ஓவர்) அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2022ல் ஹாமில்டனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 317/8 ரன் எடுத்திருந்தது.* ஒருநாள் போட்டி அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது இந்தியா (330). முதலிடத்திலும் இந்தியா (369 ரன், இடம்: டில்லி, 2025) தான் உள்ளது.மிதாலி, கல்பனாவுக்கு கவுரவம்ஆந்திர கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று, விசாகப்பட்டன மைதான கேலரியின் ஒரு பகுதிக்கு முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜின் பெயர் சூட்டப்பட்டது. இதேபோல மைதானத்தின் ஒரு 'கேட்'டிற்கு, முன்னாள் விக்கெட் கீப்பர் ரவி கல்பனாவின் பெயர் வைக்கப்பட்டது. இதற்கான விழாவில், ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ., தலைவர் மிதுன் மன்ஹாஸ், ஆந்திர கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், மிதாலி, ரவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.