| ADDED : ஆக 03, 2024 11:08 PM
கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 'டை' ஆனது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று கொழும்புவில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் (58) மட்டும் தான் நம்பிக்கை தருகிறார். மற்ற இந்திய பேட்டர்கள் தடுமாறுகின்றனர். சுப்மன் (16), கோலி (24), வாஷிங்டன் சுந்தர் (4), ஸ்ரேயாஸ் (23), ராகுல் (31) உள்ளிட்டோர் இன்று மீண்டு வர முயற்சிக்க வேண்டும். பின் வரிசையில் ஷிவம் துபே (25) போட்டியின் வெற்றியை உறுதி செய்து தர வேண்டும்.தவிர, இலங்கை ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக உள்ள நிலையில் இந்திய பேட்டர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.முதல் போட்டியில் 231 ரன் என்ற சுலப இலக்கை துரத்திய இந்திய அணி ஒரு கட்டத்தில் 130/3 என வலுவான நிலையில் இருந்தது. பின் தேவையில்லாமல் சரிந்தது. 'சுழலை' நன்றாக சமாளிக்கும் ரிஷாப் பன்ட் அல்லது சுழலிலும் கைகொடுக்கும் ரியான் பராக் அணியில் சேர்க்கப்படலாம்.சுழல் முக்கியம்இந்திய பவுலர்கள் பின் வரிசை பேட்டர்களை அவுட்டாக்க திணறுகின்றனர். 'வேகத்தில்' சிராஜ் (1), அர்ஷ்தீப் சிங் (2) மீண்டும் உதவினால் நல்லது. சுழலில் அக்சர் படேல் (2), குல்தீப் (1), வாஷிங்டன் சுந்தர் (1), சுப்மன் இணைந்து 30 ஓவரில் 124 ரன் கொடுத்து, 4 விக்கெட் தான் சாய்த்தனர். மறுபக்கம் இலங்கை சுழல் பவுலர்கள் 37.5 ஓவரில் 167 ரன்னுக்கு 9 விக்கெட் சாய்த்துள்ளனர். இதனால் இன்று இந்திய பவுலர்கள் மீண்டு வர வேண்டும்.சொந்தமண் பலம்இலங்கை அணிக்கு சொந்தமண் பலம் கைகொடுக்கிறது. பேட்டிங்கில் நிசங்கா, வெல்லாலகே அரைசதம் அடித்து அணியை மீட்க உதவினர். இதை இன்றும் தொடர முயற்சிக்கலாம்.பவுலிங்கில் ஹசரங்கா, கேப்டன் அசலங்கா, தனஞ்செயா, வெல்லாலகே என ஒட்டுமொத்தமாக இணைந்து பந்தை சுழற்றி, வலிமையான இந்திய பேட்டர்களுக்கு தொல்லை தருகின்றனர். தங்களது திட்டங்களையும் சரியாக செயல்படுத்துவது பலம்.