உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பிளே ஆப் சுற்றில் மும்பை * வெளியேறியது டில்லி அணி

பிளே ஆப் சுற்றில் மும்பை * வெளியேறியது டில்லி அணி

மும்பை: பிரிமியர் தொடரின் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி. நேற்று டில்லியை 59 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பிரிமியர் தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், காய்ச்சல் காரணமாக இப்போட்டியில் பங்கேற்கவில்லை. இவருக்குப் பதில் பொறுப்பேற்ற டுபிளசி, 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார். ரோகித் ஏமாற்றம்மும்பை அணிக்கு ரோகித் சர்மா, ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் கொடுத்தது. மிட்சல் ஸ்டார்க்கிற்குப் பதில் ஒப்பந்தம் ஆன முஸ்தபிஜுர் ரஹ்மான், 3வது ஓவரை வீசினார். இதன் 2வது பந்தில் ரோகித் (5) அவுட்டானார்.ரிக்கிள்டனுடன் இணைந்தார் வில் ஜாக்ஸ். விப்ராஜ் ஓவரில் 2 பவுண்டரி அடித்த இவர், முஸ்தபிஜுர் ஓவரில் பவுண்டரி, சிக்சர் என தொடர்ந்து விளாசினார். மறுபடியும் வந்த முகேஷ் குமாரிடம், வில் ஜாக்ஸ் (21) சிக்கினார். குல்தீப் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் ரிக்கிள்டன் (25) அவுட்டானார். பின் வந்த சூர்யகுமார், கடைசி பந்தை (6.6 ஓவர்) பவுண்டரி அனுப்பி, ரன் கணக்கைத் துவக்கினார். அடுத்த 17 பந்தில் ஒரு பவுண்டரியும் அடிக்கப்படவில்லை.சூர்யகுமார் அபாரம்முஸ்தபிஜுர் பந்தில் தன் பங்கிற்கு சிக்சர் அடித்த சூர்யகுமார், முகேஷ் குமார் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். நீண்ட நேரம் தடுமாறிய திலக் வர்மா (27 பந்தில் 27 ரன்), முகேஷ் குமார் 'வேகத்தில்' வெளியேறினார். மும்பை அணி 15 ஓவரில் 114/4 ரன் மட்டும் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 3 ரன் (6 பந்து) மட்டும் எடுத்து சமீராவிடம் 'சரண்' அடைந்தார்.19 வது ஓவரை வீசினார் முகேஷ் குமார். முதல் பந்தில் சிக்சர் அடித்த சூர்யகுமார் அரைசதம் (36 பந்து) கடந்தார். கடைசி 4 பந்தில் 4, 6, 6, 4 என நமன் திர் விளாச, மொத்தம் 27 ரன் எடுக்கப்பட்டன. சமீரா வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார், 21 (4, 6, 6, 4, 1) ரன் குவித்தார். கடைசி 12 பந்தில் 48 ரன் சேர்த்த மும்பை அணி, 20 ஓவரில் 180/5 ரன் குவித்தது. சூர்ய குமார் (73), நமன் திர் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.சான்ட்னர் 'மூன்று'அடுத்து களமிறங்கிய டில்லி அணிக்கு டு பிளசி (6), ராகுல் (11) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. அபிஷேக் போரல் (6) நிலைக்கவில்லை. விப்ராஜ் (20), சமீர் ரிஸ்வி (39), அஷுதோஷ் (18) என மூவரும் சான்ட்னர் சுழலில் சிக்கினர். ஸ்டப்சை (2) வெளியேற்றிய பும்ரா, மாதவ் திவாரியை (3) போல்டாக்கினார். குல்தீப் (7), முஸ்தபிஜுர் (0) கைவிட்டனர். டில்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. 13 போட்டியில் 8 ல் வென்ற மும்பை (16 புள்ளி) 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.ரோகித் 2500 ரன்நேற்று 4 ரன் எடுத்த போது, வான்கடே மைதானத்தில் நடந்த பிரிமியர் போட்டிகளில், மும்பை அணிக்காக 2500 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் ரோகித் சர்மா.குல்தீப் 100 விக்.,ரிக்கிள்டனை அவுட்டாக்கிய டில்லி அணியின் குல்தீப், பிரிமியர் அரங்கில் தனது 100வது விக்கெட் வீழ்த்தினார். இவர் 97 வது போட்டியில் இந்த இலக்கை எட்டினார்.* குறைந்த போட்டியில் இதை அடைந்த பவுலர்களில் அமித் மிஸ்ரா, ரஷித் கான், வருண் சக்ரவர்த்தி (தலா 83 போட்டி) முதலிடத்தில் உள்ளனர். 2 முதல் 4 வரையிலான இடத்தில் சகால் (84), சுனில் நரைன் (86), குல்தீப் (97) உள்ளனர்.13 முறை'டி-20' கிரிக்கெட்டில் அதிக முறை 25 அல்லது அதற்கும் மேல் என ரன் எடுத்த வீரர்களில் முதலிடத்தை, தென் ஆப்ரிக்காவின் பவுமாவுடன் பகிர்ந்து கொண்டார் சூர்யகுமார். இருவரும் தலா 13 முறை இதுபோல ரன் எடுத்தனர்.* பிராட் ஹாட்ஜ் (ஆஸி.,), ருடால்ப் (தெ.ஆப்.,), சங்ககரா (இலங்கை), கிறிஸ் லின் (ஆஸி.,), கைல் மேயர்ஸ் (வெ.இண்டீஸ்) தலா 11 முறை இதுபோல ரன் எடுத்தனர்.நான்கு அணிகள் தகுதிபிரிமியர் தொடரில் குஜராத் (18 புள்ளி), பெங்களூரு (17), பஞ்சாப் (17), மும்பை (16) என 4 அணிகள், 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின. இன்னும் 7 லீக் போட்டிகள் மீதமுள்ளன. இதன் பின் 'பிளே ஆப்' அட்டவணை தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை