புதிய கேப்டன் அக்சர்
புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் இதுவரை டில்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை. ஒவ்வொரு சீசனிலும் பல மாற்றம் செய்ய போதும், கனவு கைகூடவில்லை. இம்முறை ரிஷாப் பன்ட் லக்னோ அணிக்கு சென்று விட்ட நிலையில், புதிய கேப்டனாக ராகுல் தேர்வாகலாம் என நம்பப்பட்டது. ஆனால், 'வீரராக அணியின் வெற்றிக்கு கைகொடுக்கிறேன்,' என தெரிவித்தார். இதில் புதிய கேப்டனாக அக்சர் படேல் 31, நியமிக்கப்பட்டார். 150 போட்டியில் 1653 ரன், 123 விக்கெட் எடுத்தவர். 2019 முதல் டில்லி அணிக்காக 82 போட்டியில் 967 ரன், 62 விக்கெட் சாய்த்த அனுபவம் உள்ளது.இந்திய அணி துணைக் கேப்டனாக உள்ள அக்சர், 2024-25 உள்ளூர் சீசனில் குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்தார்.அக்சர் படேல் கூறுகையில்,'' டில்லி அணி கேப்டனாக தேர்வானது பெருமை. அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் என்மீது கொண்ட நம்பிக்கைக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்,'' என தெரிவித்துள்ளார்.இதனிடையே ராகுல் வெளியிட்ட செய்தியில்,' அக்சர் படேலுக்கு வாழ்த்துகள். டில்லி அணி கேப்டனாக உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும். நான் எப்போதும் துணையாக இருப்பேன்,' என தெரிவித்துள்ளார்.