இஷான் கிஷான் சதம்: துலீப் டிராபியில் அசத்தல்
பெங்களூரு: துலீப் டிராபி லீக் போட்டியில் இந்தியா 'சி' அணியின் இஷான் கிஷான் சதம் கடந்தார்.ஆந்திராவின் அனந்தபூரில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், துலீப் டிராபி 61வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் இந்தியா 'பி', இந்தியா 'சி' அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற இந்தியா 'பி' அணி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.இந்தியா 'சி' அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (46), சாய் சுதர்சன் (43), ரஜத் படிதர் (40) கைகொடுத்தனர். இஷான் கிஷான் (111) சதம் விளாசினார். மறுமுனையில் அசத்திய பாபா இந்திரஜித் (78) அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 'சி' அணி 5 விக்கெட்டுக்கு 357 ரன் எடுத்தது. இந்தியா 'பி' அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட் சாய்த்தார்.முலானி அரைசதம்: மற்றொரு லீக் போட்டியில் இந்தியா 'ஏ', இந்தியா 'டி' அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற இந்தியா 'டி' அணி கேப்டன் ஸ்ரேயாஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தார். இந்தியா 'ஏ' அணிக்கு பிரதம் சிங் (7), கேப்டன் மயங்க் அகர்வால் (7), திலக் வர்மா (10) ஏமாற்றினர். ஷாம்ஸ் முலானி (88*), தனுஷ் (53) அரைசதம் கடந்தனர்.ஆட்டநேர முடிவில் இந்தியா 'ஏ' அணி 8 விக்கெட்டுக்கு 288 ரன் எடுத்திருந்தது. இந்தியா 'டி' அணி சார்பில் ஹர்ஷித் ராணா, வித்வத் கவேரப்பா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.