வரலாறு படைத்தது இத்தாலி: டி-20 உலக கோப்பைக்கு தகுதி
தி ஹேக்: 'டி-20' உலக கோப்பைக்கு இத்தாலி அணி முதன்முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது.இந்தியா, இலங்கையில், அடுத்த ஆண்டு 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 அணிகள் தகுதி பெற்றன. மீதமுள்ள 7 இடங்களுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படுகிறது.ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்று நெதர்லாந்தில் நடந்தது. இதில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜெர்சி, கெர்ன்சி, இத்தாலி என 5 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நெதர்லாந்து (6 புள்ளி) உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. இத்தாலி, ஜெர்சி அணிகள் தலா 5 புள்ளிகளுடன் இருந்தன. 'ரன் ரேட்' அடிப்படையில் இத்தாலி அணி (0.612) 2வது இடம் பிடித்து, முதன்முறையாக 'டி-20' உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. ஜெர்சி அணி (0.306) 3வது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.ஜெர்சி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்து. நான்காவது இடம் பிடித்த ஸ்காட்லாந்து அணி (3 புள்ளி), உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.