பாகிஸ்தான் நம்பர்-8: ஐ.சி.சி., தரவரிசையில் பின்னடைவு
துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது.டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பாகிஸ்தான் அணி 76 ரேட்டிங் புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இது, 1965க்கு பின் ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி பெற்ற மோசமான ரேட்டிங் புள்ளியானது. இச்சரிவுக்கு, சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது காரணம். வங்கதேச அணி (66) 9வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.இலங்கை (83 ரேட்டிங் புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (77) அணிகள் தலா ஒரு இடம் முன்னேறி முறையே 6, 7வது இடத்தை கைப்பற்றின. முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா (124 ரேட்டிங் புள்ளி), இந்தியா (120), இங்கிலாந்து (108) அணிகள் நீடிக்கின்றன. அடுத்த இரு இடங்களில் தென் ஆப்ரிக்கா (104), நியூசிலாந்து (96) தொடர்கின்றன.