ரன் மழை பொழியும் ராகுல்
பெங்களூரு: பிரிமியர் தொடரில் 'ஹீரோ'வாக ஜொலிக்கிறார் ராகுல். தொடர்ந்து இரு அரைசதம் விளாசி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் 'கீப்பர்-பேட்டர்' லோகேஷ் ராகுல் 32. 'ஒயிட் பால்' கிரிக்கெட்டில் அசத்தும் இவர், சமீபத்தில் இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி வெல்ல கைகொடுத்தார். லக்னோ டூ டில்லி: கடந்த ஆண்டு பிரிமியர் தொடரில், லக்னோ அணி கேப்டனாக ராகுல் இருந்தார். ஐதராபாத்திற்கு எதிரான லீக் போட்டியில் படுதோல்வி அடைய, லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஆத்திரமடைந்தார். மைதானத்தில் வைத்து ராகுலை திட்டினார். இவை 'கேமரா' கண்களில் பதிவாக, இந்த வீடியோ 'வைரல்' ஆனது. ராகுல் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின் நடந்த வீரர்கள் ஏலத்தில் டில்லி அணி ராகுலை ரூ. 14 கோடிக்கு வாங்கியது. லக்னோ அணி புதிய கேப்டனாக ரிஷாப் பன்ட்டை (ரூ. 27 கோடி) நியமித்தது. ரிஷாப் ஏமாற்றம்: தற்போதைய தொடரில் காட்சிகள் மாறியுள்ளன. ரிஷாப் பன்ட் (5 போட்டி, 19 ரன்) சொதப்புகிறார். மகள் பிறந்த மகிழ்ச்சியில் உள்ள ராகுல் மிரட்டுகிறார். சென்னைக்கு எதிராக 51 பந்தில் 77 ரன் விளாசினார். பெங்களூருவுக்கு எதிராக 93 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். 3 போட்டிகளில் 185 ரன் (சராசரி 92.50) எடுத்துள்ளார். தனிநபராக அசத்தல்: 'பேட்டிங் ஆர்டரில்' எந்த இடத்திலும் களமிறங்கி அசத்துவது தான் ராகுலின் பலம். நேற்று முன் தினம் பெங்களூருவுக்கு (163/7, 20 ஓவர்) எதிரான போட்டியில் 4வது இடத்தில் வந்தார். டுபிளசி (2), மெக்குர்க் (7), அபிஷேக் போரல் (7) உள்ளிட்ட 'டாப்-ஆர்டர்' வீரர்கள் 'கிராஸ் பேட் ஷாட்' அடித்து அவுட்டாகினர். கேப்டன் அக்சர் படேல் கைவிட, டில்லி 9 ஓவரில் 60/4 என தவித்தது. தனிநபராக போராடினார் ராகுல். முதல் 29 பந்தில் 29 ரன் தான் எடுத்தார். போகப் போக அதிரடிக்கு மாறினார். அடுத்த 24 பந்துகளில் 64 ரன் விளாசினார். ஹேசல்வுட் ஓவரில் (15வது) 22 ரன் (4,4,2,2,4,6) எடுத்தார். 18 பந்தில் 18 ரன் தேவை என்ற நிலையில், யாஷ் தயாள் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தொடர்ந்து ஒரு இமாலய சிக்சர் அடித்து, டில்லிக்கு(169/4, 17.5 ஓவர்) வெற்றி தேடித் தந்தார். 53 பந்தில் 93 ரன் (7x6, 6x6) எடுத்தார். 'காந்தாரா' பாணிபின் ஆடுகளத்தில் பேட் மூலம் வட்டம் வரைந்தார். வட்டத்திற்குள் பேட்டை நிறுத்தி, வெற்றியை வித்தியாசமாக கொண்டாடினார். 'காந்தாரா' கன்னட படத்தில் வரும் 'ஹீரோ' நெருப்பு வளையத்தில் வாளை வைத்து வட்டமிட்டு துணிச்சல், மனஉறுதியை வெளிப்படுத்துவார். இதே போல ராகுலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.ராகுல் 32, கூறுகையில்,''கர்நாடகாவில் பிறந்தவன் என்பதால், சின்னசாமி மைதானம் பற்றி நன்கு தெரியும். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில், பேட் செய்ய சிரமமாக இருந்தது. 20 ஓவர் கீப்பராக இருந்தது, ஆடுகளத்தின் தன்மையை அறிய உதவியது. இது நான் வளர்ந்த இடம், நான் விளையாடிய சொந்த மைதானம் என்பதை ரசிகர்களுக்கு சொல்லவே 'காந்தாரா' பட பாணியில் வெற்றியை கொண்டாடினேன்,''என்றார்.
சவாலான ஆடுகளம்
பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்டர்களுக்கு சாதகமானது. கோலி, கெய்ல், டிவிலியர்ஸ் போன்றோர் ரன் மழை பொழிந்தனர். இம்முறை ரன் எடுப்பது கடினமாக உள்ளது. இதனால், குஜராத், டில்லியிடம் சொந்த மண்ணில் பெங்களூரு தோற்றது. இது பற்றி பெங்களூரு அணி ஆலோசகர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்,''டி-20 போட்டியில், பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்கி ரன் சேர்ப்பது கடினம். ஆனால், ராகுல் இந்த பணியை சிறப்பாக செய்கிறார். பவுண்டரி, சிக்சர்களை காணவே ரசிகர்கள் விரும்புகின்றனர். பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகளம் கேட்டோம். ஆனால், சவாலான ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. சின்னசாமி மைதான ஆடுகள பராமரிப்பாளரிடம் பேச உள்ளோம். வரும் போட்டிகளில் ஆடுகளம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்,''என்றார்.