ரிஷாப் பன்ட் வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு
புதுடில்லி: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரிஷாப் பன்ட் தேர்வானார்.இந்தியா வரவுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 19ல் சென்னையில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் (செப். 27 - அக். 1) நடக்கவுள்ளது. இதில் முதல் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.வங்கதேசத்துக்கு எதிரான மிர்புர் டெஸ்ட் போட்டிக்கு பின் (2022, டிச. 22-25), இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட், கார் விபத்தில் (2022, டிச. 30) சிக்கினார். காயத்தில் இருந்து மீண்ட இவர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 'டி-20' உலக கோப்பையில் விளையாடினார். டெஸ்ட் அணிக்கு திரும்புவதற்காக உள்ளூர் துலீப் டிராபி போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தேர்வானார். இளம் வேகப்பந்துவீச்சாளர்களான யாஷ் தயால், ஆகாஷ் தீப் இடம் பெற்றுள்ளனர். சீனியர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி
ரோகித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராத் கோலி, லோகேஷ் ராகுல், சர்பராஸ் கான், ரிஷாப் பன்ட், துருவ் ஜுரெல், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா, யாஷ் தயால்.