சபாஷ் ஷபாலி வர்மா: 197 ரன் விளாசினார்
ராஜ்கோட்: பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் ஹரியானா வீராங்கனை ஷபாலி வர்மா 197 ரன் விளாசினார்.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சீனியர் பெண்களுக்கான ஒருநாள் தொடர் நடத்தப்படுகிறது. நேற்று, ராஜ்கோட்டில் நடந்த காலிறுதியில் ஹரியானா, பெங்கால் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்கால் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஹரியானா அணிக்கு ரீமா, ஷபாலி வர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய ஷபாலி வர்மா சதம் கடந்தார். ரீமா அரைசதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்த போது ரீமா (58) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஷபாலி, 115 பந்தில், 197 ரன் (11 சிக்சர், 22 பவுண்டரி) எடுத்து இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஹரியானா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 389 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய பெங்கால் அணிக்கு சர்கார் (113), பாலா (88*), தாரா (69), சஸ்தி (52) கைகொடுத்தனர். பெங்கால் அணி 49.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மீண்டும் இடம்: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. சீனியர் ஒருநாள் தொடரில் எழுச்சி கண்ட ஷபாலி, 7 போட்டியில், 2 சதம், 2 அரைசதம் உட்பட 527 ரன் குவித்து, இழந்த 'பார்மை' மீட்டுள்ளார். இதனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிறந்த 'சேஸ்'
ஹரியானாவை வீழ்த்திய பெங்கால் அணி, பெண்களுக்கான 'லிஸ்ட்-ஏ' போட்டியில் அதிக ரன்னை (390) 'சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன், 2022ல் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 322 ரன்னை நியூசிலாந்து பெண்கள் அணி 'சேஸ்' செய்தது (325/1, 44.3 ஓவர்) சிறந்த வெற்றியாக இருந்தது.