இலங்கை அணி அபாரம்: இங்கிலாந்து தடுமாற்றம்
ஓவல்: இலங்கை பவுலர்கள் அசத்த, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 156 ரன்னுக்கு சுருண்டது.இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் 3வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 211/5 ரன் எடுத்திருந்தது. தனஞ்செயா (64), கமிந்து (54) அவுட்டாகாமல் இருந்தனர்.மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆறாவது விக்கெட்டுக்கு 127 ரன் சேர்த்த போது கேப்டன் தனஞ்செயா டி சில்வா (69) அவுட்டானார். கமிந்து மெண்டிஸ் (64) கைகொடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் ஜோஷ் ஹல், ஸ்டோன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து பேட்டர்கள் தடுமாறினர். பென் டக்கெட் (7), கேப்டன் போப் (7), ஜோ ரூட் (12), ஹாரி புரூக் (3) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். டான் லாரன்ஸ் (35) ஆறுதல் தந்தார். கிறிஸ் வோக்ஸ் (0), அட்கின்சன் (1) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய ஜேமி ஸ்மித் (67) அரைசதம் கடந்தார்.மற்றவர்கள் ஏமாற்ற இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 156 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இலங்கை சார்பில் லகிரு குமாரா 4, விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட் சாய்த்தனர்.பின் 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் 94/1 ரன் எடுத்திருந்தது. பதும் நிசங்கா (53*), குசால் மெண்டிஸ் (30*) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 125 ரன் மட்டும் தேவைப்படுகிறது.