சூப்பர் கேப்டன் டெம்பா பவுமா: தென் ஆப்ரிக்க அணிக்கு வரமா
லண்டன்: தென் ஆப்ரிக்கா போற்றும் சாதனை தலைவனாக உருவெடுத்திருக்கிறார் டெம்பா பவுமா. சோதனைகளை கடந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முத்தமிட்டுள்ளார்.லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25 சீசன்) பைனலில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 27 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., தொடரில் கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதற்கு கேப்டன் பவுமா, மார்க்ரம், ரபாடா போன்ற வீரர்கள் முக்கிய காரணம். அணியை சிறப்பாக வழிநடத்திய பவுமாவின் பங்கு அதிகம்.கனவு பலித்தது: தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் உள்ள லங்காவில் 1990, மே 17ல் பிறந்தார் பவுமா. இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 2001ல் 6ம் வகுப்பு படித்தார். அப்போது,'இன்னும் 15 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? என ஆசிரியர் கட்டுரை எழுத சொல்லி உள்ளார். அதற்கு,'தென் ஆப்ரிக்க கிரிக்கெட் 'ஜெர்சி' அணிய வேண்டும். அணியில் இடம் பிடித்ததற்காக அதிபர் என்னை கைகுலுக்கி பாராட்ட வேண்டும்,' என 11 வயது பவுமா எழுதியிருக்கிறார். அவர் கணித்தது போல, சரியாக 15 ஆண்டுகளில், 2016ல் தென் ஆப்ரிக்க அணிக்காக டெஸ்டில் சதம் (எதிர், இங்கி.,) அடித்த முதல் கறுப்பின வீரர் என்ற பெருமை பெற்றார்.பவுமாவை பொறுத்தவரை பெரிய 'ஷாட்' அடிக்க மாட்டார். 'கூலாக' செயல்பட்டு மனஉறுதியுடன் சாதிக்கும் திறன் பெற்றவர். 2022ல் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை 10 டெஸ்டில் 9 வெற்றி, 1 டிரா என வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். கேப்டன் ஆட்டம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25 சீசன்) தொடரில் 8 போட்டிகளில் 711 ரன் (சராசரி 59.25) குவித்தார். பைனலில் (36, 66) கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி, முதல் சாம்பியன் பட்டம் பெற உதவினார். முன்பு ஐ.சி.சி., 'நாக்-அவுட்' போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி, வெற்றியை நெருங்கி பதட்டத்தில் கோப்பையை பறிகொடுக்கும். இதனால் 'சோக்கர்ஸ்' என கேலி செய்தனர். இதற்கு பவுமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து பவுமா கூறுகையில்,''பைனலில் 'பேட்' செய்து கொண்டிருந்த போது எங்களை அச்சுறுத்தக்கூடிய 'சோக்கர்ஸ்' என்ற வார்த்தையை ஆஸ்திரேலிய அணியினர் அடிக்கடி பயன்படுத்தினர். இதை கண்டுகொள்ளாமல் சாதித்துக் காட்டினோம். எங்கள் தேச ஒற்றுமைக்கு இந்த வெற்றி சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறோம்,''என்றார்.
அழகான தருணம்
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அரங்கில் புதிய சரித்திரம் படைத்த மகிழ்ச்சியில், செல்ல மகனிடம் உலக டெஸ்ட் பட்டத்திற்கான 'கதாயுதத்தை' சில வினாடிகள் கொடுத்தார் பவுமா. பின் வலது கையில் மகனை துாக்கி கொண்டு, இடது கையில் 'கதாயுதத்தை' உயரே பிடித்துக் கொண்டு லார்ட்ஸ் மைதானத்தை 'கெத்தாக' உலா வந்தார். தந்தை-மகனின் இந்த வெற்றி கொண்டாட்டம், தென் ஆப்ரிக்க அணியின் வளமான அடுத்த தலைமுறையை உலகிற்கு உணர்த்தியது.