இலங்கையை வென்றது பாகிஸ்தான்
சார்ஜா: ஐ.சி.சி., சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன.'ஏ' பிரிவு போட்டியில் ஆசிய சாம்பியன் இலங்கை, பாகிஸ்தான் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முனீபா (11), சித்ரா அமின் (12), ஒமைமா (18), நிடா தர் (23) சற்று உதவினர். கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சம் 30 ரன் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் சுழலில் அசத்திய கேப்டன் சமாரி அத்தபத்து, உதேஷிகா, சுகந்திகா தலா 3 விக்கெட் சாய்த்து கைகொடுத்தனர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சில் அதிர்ந்தது. விஷ்மி (20), நிலாக்சிகா (22) தவிர மற்றவர்கள் ஏமாற்ற, 20 ஓவரில் 85/9 ரன் மட்டும் எடுத்து, 31 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. வங்கதேசம் அபாரம்சார்ஜாவில் நேற்று நடந்த 'பி' பிரிவு முதல் போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து மோதின. தனது 100 வது சர்வதேச 'டி-20' போட்டியில் களமிறங்கிய வங்கதேச அணி கேப்டன் நிகர் சுல்தானா, 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.வங்கதேசத்துக்கு ஷாதி ராணி (29), முர்ஷிதா (12) ஜோடி துவக்கம் கொடுத்தது. சோபனா 38 பந்தில் 36 ரன் எடுக்க, நிகர் சுல்தானா 18 ரன்னில் அவுட்டானார். மற்ற வீராங்கனைகள் கைவிட, வங்கதேச அணி 20 ஓவரில் 119/7 ரன் எடுத்தது.எளிய இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணிக்கு கேப்டன் கேத்ரின் பிரைஸ் (11), அலிசா லிஸ்டர் (11) மட்டும் இரட்டை இலக்க ரன் எடுத்தனர். மற்ற யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. கடைசி வரை சாரா பிரைஸ் (49) போராடிய போதும், வெற்றிக்கு போதவில்லை. ஸ்காட்லாந்து அணி 20 ஒவரில் 103/7 ரன் மட்டும் எடுத்து, 16 ரன்னில் தோல்வியடைந்தது.