திண்டுக்கல் கலக்கல் வெற்றி * திருப்பூர் அணி ஏமாற்றம்
நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், டி.என்.பி.எல்., 'டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 10 வது சீசன், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' திருப்பூர் அணி, திண்டுக்கல் அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் 'பீல்டிங்' தேர்வு செய்தது.புவனேஸ்வரன் அபாரம்திருப்பூர் அணிக்கு துஷார் ரஹேஜா (4), அமித் சாத்விக் ஜோடி துவக்கம் தந்தது. புவனேஸ்வரன் வீசிய இத்தொடரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த அமித், அடுத்த இரு பந்தில் சிக்சர், பவுண்டரி விளாசினார். 5வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய அமித் (6 பந்து, 20 ரன்), கடைசி பந்தில் வெளியேறினார். மீண்டும் வந்த புவனேஸ்வரன் இம்முறை பிரதோஷ் (7), சாய் கிஷோரை (4) அவுட்டாக்கினார்.முகமது அலி (11), சசிதேவ் (17) ஏமாற்றினர். இசக்கிமுத்து (15), சிலம்பரசன் (4) கைவிட, திருப்பூர் அணி 15.4 ஓவரில், 107 ரன்னில் சுருண்டது. திண்டுக்கல் சார்பில் புவனேஸ்வரன், நிரங்கர் தலா 3 விக்கெட் சாய்த்தனர். அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு அனுராக், ஷிவம் சிங் (10) ஜோடி துவக்கம் தந்தது. ஜெயந்த் (7) ஏமாற்றினார். அனுராக் 34 ரன் எடுத்தார். பின் விமல் குமார் (33*), செய்னி (17*) இணைந்து விளாச, திண்டுக்கல் அணி 18.3 ஓவரில் 111/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.