உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ‘வெற்றித் திலகம்’ திலக் வர்மா... திக்...திக்.., போட்டியில் இந்தியா அசத்தல்

‘வெற்றித் திலகம்’ திலக் வர்மா... திக்...திக்.., போட்டியில் இந்தியா அசத்தல்

கிறைஸ்ட்சர்ச்: இரண்டாவது ‘டி–20’ போட்டியில் திலக் வர்மா 26 பந்தில் 51 ரன் விளாச, இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று (அக். 24) கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது.

வைபவ் வாய்ப்பு

இந்திய அணியில் இஷான் கிஷான் (இடுப்பு பகுதியில் காயம்), மயங்க் யாதவிற்கு பதிலாக 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, பிரின்ஸ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

பிலிப்ஸ் அரைசதம்

நியூசிலாந்து அணியை இந்திய ‘வேகங்கள்’ திணறடித்தனர். அர்ஷ்தீப் சிங் பந்தில் செய்பர்ட் (7) அவுட்டானார். புவேனேஷ்வர் குமார் பந்தில் டேரில் மிட்சல் (6) வீழ்ந்தார். பிரின்ஸ் யாதவ் பந்தில் ஆலன் (16) போல்டாக, 5.2 ஓவரில் 3/41 ரன் எடுத்து தவித்தது. பின் கிளன் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ் அரைசதம் கடந்து கைகொடுத்தனர். அர்ஷ்தீப் பந்தில் பிலிப்ஸ் 70 ரன்னுக்கு (43 பந்து, 4x4, 4x6) வெளியேறினார். சிறிது நேரத்தில் ஜேக்கப்ஸ் (58 ரன், 46 பந்து, 5x4, 1x6) கிளம்ப, இந்தியாவுக்கு நிம்மதி ஏற்பட்டது. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 180/5 ரன் எடுத்தது. கேப்டன் சான்ட்னர் (4), பிரேஸ்வெல் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

‘டாப்–ஆர்டர்’ திணறல்

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா சுமாரான துவக்கம் தந்தனர். ஜேக்கப் டபி பந்தில் சஞ்சு சாம்சன் (14) அவுட்டானார். பெரும் எதிர்பார்ப்புடன் 3வது இடத்தில் களமிறங்கிய, 15 வயது வைபவ் சூர்யவன்ஷி (4) சோபிக்கவில்லை. சான்ட்னர் ‘சுழலில்’ அபிஷேக் சர்மா (27) சிக்கினார். தொடர்ந்து மிரட்டிய சான்ட்னர், ஒரே ஓவரில் (11வது) கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (7), அக்சர் படேலை (11) வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். இந்தியா 10.5 ஓவரில் 70/5 ரன் எடுத்து தவித்தது.

திலக் வர்மா விளாசல்

அடுத்து வந்த நமன் திர் 17 பந்தில் 31 ரன் விளாசி நம்பிக்கை தந்தார். கடைசி கட்டத்தில் திலக் வர்மா, நிதிஷ் குமார் சேர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். டபி ஓவரில் (18வது) நிதிஷ் குமார் (1x6), திலக் வர்மா(4, 4) விளாச, 17 ரன் கிடைத்தன. நாதன் ஸ்மித் ஓவரில் (19வது) திலக் வர்மா (4, 4, 4, 6) வெளுத்து வாங்க (மொத்தம் 18 ரன்), போட்டி இந்தியா வசம் வந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டன. டபி பந்துவீசினார். முதல் பந்தையே திலக் வர்மா பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார். 5வது பந்தில் நிதிஷ் குமார் 2 ரன் எடுக்க, இந்திய அணி 19.5 ஓவரில் 181/6 ரன் எடுத்து வென்றது. தொடரில் 2–0 என முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் திலக் வர்மா (51 ரன், 26 பந்து, 6X4, 1X6), நிதிஷ் குமார் (26) அவுட்டாகாமல் இருந்தனர். மூன்றாவது போட்டி அக். 27ல் வெலிங்டனில் நடக்க உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்

நியூசிலாந்து 180/5 (20 ஓவர்)பேட்டிங்பிலிப்ஸ் 70(43)ஜேக்கப்ஸ் 58(46)ஆலன் 16(14)பவுலிங்அர்ஷ்தீப் 2/33 (4 ஓவர்)பிரின்ஸ் 1/30 (4 ஓவர்)இந்தியா 181/6 (19.5 ஓவர்)பேட்டிங்திலக் வர்மா 51*(26)நமன் திர் 31(17)நிதிஷ் 26*(13)பவுலிங்சான்ட்னர் 4/21 (4 ஓவர்)டபி 1/41(3.5 ஓவர்)ரிசல்ட்: இந்தியா வெற்றி (4 விக்.,)

பெருமிதம்

இரண்டாவது போட்டிக்கு முன் தலைமை பயிற்சியாளர் காம்பிர், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்கிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள்,‘ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கடைசி வரை நிலைத்து நின்று விளையாடினால் வெற்றி உறுதி’ என்றனர். இந்த வார்த்தைகளை மனதில் கொண்டு செயல்பட்டேன். நமன் திர், சக ஐதராபாத் வீரர் நிதிஷ் குமார் கைகொடுத்தனர். வெற்றி பெற்றது பெருமையான தருணம்.–திலக் வர்மாஇந்திய அணி வீரர்

‘கேட்ச்’ சாதனை

சர்வதேச ‘டி–20’ அரங்கில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ‘கேட்ச்’ பிடித்தவர் என உலக சாதனை படைத்தார் திலக் வர்மா (26 கேட்ச், 32 போட்டி, 2026). அடுத்த இடத்தில் டேனில்சன் ஹாவோ (இந்தோனேஷியா, 25 கேட்ச், 41 போட்டி, 2025) உள்ளார்.* சர்வதேச ‘டி–20’ அரங்கில் 1–6 ஓவரில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் அபிஷேக் சர்மா (100 சிக்சர்) முதலிடம் பெற்றார். அடுத்த இடத்தில் ரோகித் சர்மா (98) உள்ளார்.* சர்வதேச ‘டி–20’ அரங்கில் ஒரு ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் (38 விக்., 2026) முதலிடத்திற்கு முன்னேறிார். அடுத்த இடத்தில் புவனேஷ்வர் குமார் (37, 2022) உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ