பெனோனி: 'ஜூனியர்' உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா ஆறாவது கோப்பை வெல்ல வேண்டும்.தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை தொடர் (19 வயது) நடக்கிறது. 20 அணிகள் மோதின. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் வெளியேற, 12 அணிகள் 'சூப்பர்--6' சுற்றில் மோதின. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அரையிறுதியில் தோற்றன. பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.உதய் சஹாரன் (398 ரன்) தலைமையில் இந்தியா, இதுவரை மோதிய அனைத்து போட்டியிலும் (6) வெற்றி பெற்று வந்துள்ளது. அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் திணறியது. பின் மீண்டு வந்து வென்றது, பைனலிலும் தொடரலாம்.18 வயது முஷீர் கான் (338 ரன்), மீண்டு வர வேண்டும். பின் வரிசையில் சச்சின் தாஸ் (294), ஆரவெல்லி பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர். பந்துவீச்சில் துணைக்கேப்டன் சவுமி பாண்டே (17 விக்.,), நமன் திவாரி (10), ராஜ் லிம்பானி (8) உதவுகின்றனர்.
ஆஸி., எப்படி
ஆஸ்திரேலிய அணி பங்கேற்ற அனைத்து பேட்டியிலும் 100 சதவீத வெற்றியுடன் பைனலுக்கு வந்துள்ளது. அரையிறுதியில் கைகொடுத்த ஹாரி திக்சன், ஆலிவருடன் கேப்டன் வெய்ப்கென் மிரட்ட முயற்சிக்கலாம். பவுலிங்கில் ஸ்டிராக்கர் (12 விக்.,) பலம் சேர்க்கிறார்.
பதிலடி தருவரா
ஆமதாபாத்தில் (2023) நடந்த ஒருநாள் உலக கோப்பை பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பை இழந்தது. தற்போது ஜூனியர் உலக கோப்பை பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சாய்த்து பதிலடி தர வேண்டும்.கேப்டன் உதய் சஹாரன் கூறுகையில்,''பதிலடி குறித்து நினைக்கவில்லை. எதிர்காலம் குறித்து யோசிக்க விரும்பவில்லை. நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி வெற்றிக்கு போராடுவோம்,'' என்றார்.
யார் ஆதிக்கம்
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் ஜூனியர் உலக கோப்பை பைனலில் 2012, 2018ல் மோதின. இந்த இரண்டிலும் இந்தியா வென்று சாம்பியன் ஆனது. மூன்றாவது முறையாக இன்று பைனலில் மோதவுள்ளன.
9
ஜூனியர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி இன்று தொடர்ச்சியாக 5வது, மொத்தம் 9வது முறையாக பைனலில் விளையாடுகிறது. இதில் 5 முறை சாம்பியன் (2000, 2008, 2012, 2018, 2022) ஆனது.* ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக பைனலில் மோதுகிறது. இதில் 3 முறை கோப்பை (1988, 2002, 2010) வென்றது.