உறக்கம் இல்லாத இரவுகள் * என்ன சொல்கிறார் ஷைபாலி வர்மா
மும்பை: ''உலக கோப்பை அரையிறுதியில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் பைனலை நினைத்து, தினமும் இரவில் துாங்க முடியவில்லை,'' என ஷைபாலி வர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா 21. பெண்கள் உலக கோப்பை தொடருக்கான அணியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை. பிரதிகா ராவல் காயம் காரணமாக, அரையிறுதியில் ஷைபாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். பின் பைனலில் 87 ரன் குவித்து, இந்தியா சாம்பியன் ஆன கைகொடுத்தார்.இதுகுறித்து ஷைபாலி கூறியது:உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் (ஜூனியர்) ஏற்கனவே விளையாடியுள்ளதால், நெருக்கடியை எப்படி கையாள்வது என்ற அனுபவம் எனக்கு இருந்தது. இருப்பினும், சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் அடுத்து பைனல் வரை, இரவில் சரியாக துாங்க முடியவில்லை. அந்த இரவுகள் எப்படிச் சென்றன என்பது, எனக்கு மட்டும் தான் தெரியும். பைனலில் நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் எனது திட்டங்களை சரியாக செயல்படுத்தி, அணியின் வெற்றிக்கு உதவினேன். இவ்வாறு அவர் கூறினார்.1000 முறை பார்த்திருப்பேன்இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில்,'' கிளர்க் அடித்த அடித்த பந்தை நான் 'கேட்ச்' செய்த நிகழ்வை, 1000 முறை பார்த்திருப்பேன். இதன் பின் என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியும் அந்த தருணத்திற்காகத் தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம். இதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது,'' என்றார்.