| ADDED : ஜூலை 14, 2024 12:11 AM
மயாமி: 'கோபா அமெரிக்கா' கால்பந்து பைனலில் அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் மோதுகின்றன.அமெரிக்காவில், 'கோபா அமெரிக்கா' கால்பந்து 48வது சீசன் நடக்கிறது. மயாமியில் நாளை (அதிகாலை 5:30 மணி) நடக்கவுள்ள பைனலில் உலகின் 'நம்பர்-1' அர்ஜென்டினா அணி, 12வது இடத்தில் உள்ள கொலம்பியாவை எதிர்கொள்கிறது.'ஏ' பிரிவு லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி கண்ட அர்ஜென்டினா, காலிறுதியில் ஈகுவடார், அரையிறுதியில் கனடாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. லவ்டரோ மார்டினஸ் (4 கோல்), ஜூலியன் ஆல்வரஸ் (2), மெஸ்சி, லிசான்ட்ரோ மார்டினஸ் (தலா ஒரு கோல்) கைகொடுத்தால் 16வது முறையாக கோப்பை வெல்லலாம். இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான வரிசையில் உருகுவேயை (15) முந்தி முதலிடம் பிடிக்கலாம்.'டி' பிரிவில் தோல்வியை சந்திக்காத (2 வெற்றி, ஒரு 'டிரா') கொலம்பிய அணி, காலிறுதியில் பனாமா, அரையிறுதியில் உருகுவேயை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இன்று அர்ஜென்டினாவை சமாளிக்கும் பட்சத்தில் 23 ஆண்டுகளுக்கு பின் கொலம்பிய அணி 'கோபா அமெரிக்கா' கோப்பை வெல்லலாம். கடைசியாக 2001ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
42 முறை
சர்வதேச கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் 42 முறை மோதின. இதில் அர்ஜென்டினா 25, கொலம்பியா 9ல் வெற்றி பெற்றன. எட்டு போட்டி 'டிரா' ஆனது.