உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ஐ.எஸ்.எல்., அணிகள் மிரட்டல் * இந்திய கால்பந்தில் தொடரும் சோகம்

ஐ.எஸ்.எல்., அணிகள் மிரட்டல் * இந்திய கால்பந்தில் தொடரும் சோகம்

புதுடில்லி: 'இந்திய கால்பந்தின் எதிர்கால நலனுக்காக, உச்ச நீதிமன்றம் செல்வோம்,' என ஐ.எஸ்.எல்., அணிகள் மிரட்டல் விடுத்துள்ளன.அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2013ல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் துவங்கப்பட்டது. இத்தொடரை நடத்த கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துடன் (எப்.எஸ்.டி.எல்.,), 15 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது வரும் டிச. 8, 2025ல் முடிகிறது. ஆனால் தேசிய கூட்டமைப்பின் விதிகள் குறித்த மற்றொரு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை, புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ஏ.ஐ.எப்.எப்., மற்றும் எப்.எஸ்.டி.எல்., என இரு தரப்பிலான புதிய ஒப்பந்தம் (எம்.ஆர்.ஏ.,) குறித்து இறுதி முடிவு எடுக்கப் படவில்லை. புதிய ஒப்பந்தம் இல்லாததால் 12வது சீசனை (2025-26) நிறுத்தி வைப்பதாக எப்.எஸ்.டி.எல்., அறிவித்தது. இதுகுறித்து ஏ.ஐ.எப்.எப்., சார்பில் இதுவரை கோர்ட்டில் எதுவும் தெரிவிக்கவில்லை. மீண்டும் எப்போது ஐ.எஸ்.எல்., துவங்கும் என உறுதியாகத் தெரியாத நிலையில், பெங்களூரு, ஒடிசா அணி நிர்வாகம் வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்களுக்கான சம்பளத்தை நிறுத்தின. சென்னை அணி கால்பந்து தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. ஐ.எஸ்.எல்., தொடர்பான அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்.எல்., அணிகள் சார்பில் நேற்று வெளியான அறிக்கையில்,'ஏ.ஐ.எப்.எப்., நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இந்திய கால்பந்தின் எதிர்காலம், வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரின் நலனுக்காக, அனைத்து அணிகளும் (13) இணைந்து நேரடியாக உச்ச நீதிமன்றம் செல்ல தயாராகி வருகிறோம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !