இந்தியாவுக்கு 17 பதக்கம்: உலக ஜூனியர் குத்துச்சண்டையில்
கொலராடோ: உலக குத்துச்சண்டையில் (19 வயது) இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 17 பதக்கம் கிடைத்தது.அமெரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான 90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஹேமந்த் சங்வான், அமெரிக்காவின் ரிஷான் சிம்ஸ் மோதினர். இதில் ஹேமந்த் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.பெண்களுக்கான 65 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பார்த்தவி கிரேவால் 5-0 என, நெதர்லாந்தின் ஆலியா ஹோப்பேமாவை வீழ்த்தி தங்கம் வென்றார். பெண்களுக்கான 80+ கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் வன்ஷிகா கோஸ்வாமி, ஜெர்மனியின் விக்டோரியா காட்டை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் நிஷா (51 கிலோ), சுப்ரியா தேவி (54 கிலோ), கிரித்திகா வாசன் (80 கிலோ) தோல்வியடைந்து வெள்ளி வென்றனர்.இத்தொடரில் இந்தியாவுக்கு 4 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்கள் கிடைத்தன. இதில் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம், பெண்கள் பிரிவில் 3 தங்கம், 7 வெள்ளிப்பதக்கம் கிடைத்தன.