அரையிறுதியில் தீபிகா, ஜோதி * ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்...
தாகா: வங்கதேசத்தின் தாகாவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. தனிநபர் பெண்களுக்கான ரீகர்வ் பிரிவு போட்டி நடக்கின்றன. காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, 7-3 என தென் கொரியாவின் லீ காயுனை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்கிதா, 6-4 என தென் கொரியாவின் ஜன் மிங்கியை சாய்த்தார். இந்தியாவின் சங்கீதா, 7-1 என ஈரானின் ஜாரேவை வென்றார். மூவரும் அரையிறுதிக்கு முன்னேறினர்.* தனிநபர் ஆண்களுக்கான ரீகர்வ் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா, 6-5 என கஜகஸ்தானின் சடிகோவை வென்றார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ராகுல் 6-2 என சீன தைபேவின் லீன் சியாங்கை சாய்த்தார்.ஜோதி அபாரம்தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோதி, 147-145 என தென் கொரியாவின் யூக்யுனை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரித்திகா 148-146 என சக வீராங்கனை சிகிதாவை வென்றார். ஆண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி பங்கேற்றது. காலிறுதியில் 235-234 என மலேசியாவை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, தாய்லாந்து மோதின. இப்போட்டி 235-235 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' அசத்திய இந்திய ஆண்கள் அணி, பைனலுக்கு முன்னேறியது. இதில் நாளை கஜகஸ்தானை சந்திக்க உள்ளது. 'ரீகர்வ்' பிரிவில் இந்திய பெண்கள் அணி காலிறுதியில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. அன்ஷிகா குமாரி, அன்கிதா, சங்கீதா இடம் பெற்ற இந்திய அணி, 4-4 என சமன் செய்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 24-27 என தோற்றது.