ஆஷிஸ் லிமாயே தங்கம்: ஆசிய குதிரையேற்றத்தில் வரலாறு
பட்டாயா: ஆசிய குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஆஷிஸ் லிமாயே.தாய்லாந்தில், ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் 'ஈவென்டிங்' தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் ஆஷிஸ் லிமாயே, ஷஷாங்க் சிங் கடாரியா, ஷஷாங்க் கனுமுரி பங்கேற்றனர். இதில் 29.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஆஷிஸ் லிமாயே, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஆஷிஸ் லிமாயே. தவிர, ஆசிய அரங்கில் 1982க்கு பின் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 1982ல் நடந்த ஆசிய விளையாட்டு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு 3 தங்கம் கிடைத்திருந்தது.மற்ற இந்திய வீரர்களான ஷஷாங்க் சிங் கடாரியா (37.9 புள்ளி), ஷஷாங்க் கனுமுரி (54.5) முறையே 6, 11வது இடத்தை கைப்பற்றினர்.'ஈவென்டிங்' அணிகள் பிரிவில் ஆஷிஸ் லிமாயே, ஷஷாங்க் சிங் கடாரியா, ஷஷாங்க் கனுமுரி அடங்கிய இந்திய அணி, 121.8 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. தாய்லாந்து அணி (117.6) தங்கத்தை கைப்பற்றியது.இம்முறை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 4 வெள்ளி என, 5 பதக்கம் கிடைத்துள்ளது.