யூத் தடகளம்: நிவேத் தங்கம்
பாட்னா: யூத் தடகள சாம்பியன்ஷிப் 110 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் நிவேத் தங்கம் கைப்பற்றினார்.தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன், பீஹாரின் பாட்னாவில் நடக்கிறது. இரண்டாவது நாளான நேற்று, ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. தமிழகத்தின் நிவேத், 14.35 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஜார்கண்ட்டின் சாஜித் (14.421), கேரளாவின் பஜலுல் ஹக் (14.429) வெள்ளி, வெண்கலம் வென்றனர். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் எட்வினா (55.86 வினாடி) தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் ஜீவிதா, 15.41 வினாடி நேரத்தில் ஓடி, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். மகாராஷ்டிராவின் ஷவுரியா (14.55), ஷ்ரேயா (14.86) தங்கம், வெள்ளி கைப்பற்றினர். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் சாஷா ஸ்ரீ, 5.36 மீ., துாரம் தாண்டி, வெண்கலம் வென்றார். ராஜஸ்தானின் ஜோதி (5.69), மேற்கு வங்கத்தின் ஒபாமி முர்மு (5.54) முதல் இரு இடம் பிடித்தனர். ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஹரியானாவின் நிஷ்சாய், 18.93 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். அஹந்த் பிரதாப் சிங் (17.97 மீ., உ.பி.,), ஹர்பிரதாப் சிங் (17.40, பஞ்சாப்) அடுத்த இரு இடம் பிடித்தனர். ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் பிரட்ரிக் ரசல் (11.04 வினாடி) வெள்ளி வென்றார்.