| ADDED : ஏப் 16, 2024 10:57 PM
புதுடில்லி: ''சிறந்த தற்காப்பு ஆட்டம், புதுமையான முறையில் பந்தை 'பாஸ்' செய்வது போன்ற திட்டங்களால், ஆஸ்திரேலிய ஹாக்கி அணியை இந்தியா சமாளிக்கலாம்,'' என முன்னாள் வீரர் ருபேந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கிலும் சாதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தயராகும் வகையில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, ஒரு வெற்றி கூட பெறவில்லை. 0-5 என்ற கணக்கில் தொடரை இழந்தது.இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் ருபேந்தர் பால் சிங் 33, கூறியது:ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் 1-5 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது. இதன் பின் அடுத்த போட்டிகளில் பல்வேறு கோல் வாய்ப்புகளை வீணடித்து தோற்றாலும், ஒட்டுமொத்தமாக வீரர்கள் செயல்பாடு நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன் சில பிரிவுகளில் முன்னேற்றம் அடைய வேண்டும்.ஆஸ்திரேலிய வீரர்கள் தாக்குதல் பாணியில் வேகமாக செயல்படுகின்றனர். இதை சமாளிக்க இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்த முறையில் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பந்துகளை சக வீரர்களுக்கு 'பாஸ்' செய்வதில் புதிய திட்டங்களை பயன்படுத்த வேண்டும். விரைவாக 'பாஸ்' செய்வது, வீரர்கள் தலைக்கு மேலாக பந்தை துாக்கி அடித்து கொண்டு செல்வது போன்றவை, ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க கைகொடுக்கும்.உலகின் அனைத்து அணிகளும் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை நம்பியுள்ளன. பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலிய அணிகள் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை கோலாக மாற்றுவதில் வலிமையாக உள்ளன. இந்திய அணி 2ல் 1 வாய்ப்பில் எப்படியும் கோல் அடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.