உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஒலிம்பிக் சாம்பியன் லவ்லினாவுக்கு அவமதிப்பு * குத்துச்சண்டை இயக்குனர் மீது புகார்

ஒலிம்பிக் சாம்பியன் லவ்லினாவுக்கு அவமதிப்பு * குத்துச்சண்டை இயக்குனர் மீது புகார்

புதுடில்லி: ''குத்துச்சண்டை இயக்குனர் அருண் மாலிக் அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டார்,'' என லவ்லினா புகார் தெரிவித்துள்ளார்.இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா 27. டோக்கியோ ஒலிம்பிக்கில் (2016) வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் (2023) வென்றவர். சமீபத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,), ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் திட்ட பிரிவு (டி.ஒ.பி.எஸ்.,) சார்பில் நடந்த 'ஆன்லைனில்' நடந்த கூட்டத்தில், தனது பயிற்சியாளருடன் பங்கேற்றார். அப்போது லவ்லினா,' தேசிய முகாம், ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி பெறச் செல்லும் போது, சொந்த பயிற்சியாளரையும் அனுமதிக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தார். இதற்கு இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (பி.எப்.ஐ.,) தலைமை இயக்குனர் கர்னல் அருண் மாலிக், லவ்லினாவை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து, மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,), இந்திய விளையாட்டு ஆணையம், பி.எப்.ஐ.,க்கு லவ்லினா புகார் தெரிவித்துள்ளார்.அதில் லவ்லினா கூறியது:பயிற்சியாளர் வேண்டும் எனக் கேட்டதற்கு, 'வாயை மூடு, தலையை குனி, நாங்கள் சொல்வதை மட்டும் செய்,' என்றார் அருண் மாலிக். இந்த வார்த்தைகள், பாலின பாகுபாடு, சர்வாதிகார ஆதிக்கத்தை வெளிப்படுத்தின. தேசத்திற்கு பெருமை சேர்த்த ஒரு பெண்ணை இப்படி அவமரியாதை செய்யலாமா. அவரது வார்த்தைகளால் கூனி, குறுகி, எவ்வித சக்தியும் இல்லாமல் இருப்பது போல உணர்ந்தேன். இது எனக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானம் மட்டுமல்ல. குத்துச்சண்டை வளையத்துக்கு உள்ளேயும், வெளியிலும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என கனவு காணும் ஒவ்வொரு வீராங்கனைகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் இது. இந்த சம்பவம் குறித்து நியாயமான, விரைவான விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அருண் மறுப்புஅருண் மாலிக் கூறுகையில்,'' லவ்லினா கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, விதிகளின் படி மறுக்கப்பட்டது. ஏனெனில் தேசிய முகாமில் தனிப்பட்ட பயிற்சியாளருக்கு அனுமதி கிடையாது. இவர் புகாரில் எவ்வித உண்மையும் இல்லை,'' என்றார்.இதனிடையே ஐ.ஒ.ஏ., சார்பில், லவ்லினா புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை