ஹாக்கி: ஐதராபாத் அணி வெற்றி
ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஐதராபாத் அணி 5-1 என கலிங்கா அணியை வீழ்த்தியது.ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் கலிங்கா (ஒடிசா), ஐதராபாத் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஐதராபாத் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி சார்பில் கான்சலோ பீலட் 2 (6, 30வது நிமிடம்), மைக்கோ கேசெல்லா (21வது), டிம் பிராண்ட் (47வது), அர்ஷ்தீப் சிங் (54வது) தலா ஒரு கோல் அடித்தனர். கலிங்கா அணிக்கு அலெக்சாண்டர் ஹென்டிரிக்ஸ் (5வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.ஐதராபாத் அணி 6 போட்டியில், 2 வெற்றி, 2 'டிரா', 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. கலிங்கா அணி 7 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு 'டிரா', 3 தோல்வி) 6வது இடத்தில் உள்ளது.